Featured

அன்பின் ஆழம் புத்தக வெளியீடு

 

அன்பர்களே,

ஈழத்து மூத்த எழுத்தாளர் எஸ். பொ  அவர்கள், தமிழ் ஈழ பெண் எழுத்தாள்ர்   வரிசையில் எனக்கும்  ஒரு இடமுண்டு என கூறியிருக்கிறார். அந்த வகையில், புலம்பெயர்ந்த எழுத்தாழர்கள் வரிசையில் எனக்கும் ஒரு இடமுண்டு என்பதில் பெருமையடைகிறேன்.

எனது ’அன்பின் ஆழம்’ புத்தக  வெளியீட்டைப் பற்றி  மதுரா மஹாதேவ் தமிழ் முரசிலும், தினக்குரல் வாரப்  பத்திரிகையிலும் எழுதி வெளி வந்தக் கட்டுரையைக் கீழே படிக்கலாம்.

DSC_0539

 

திருமதி தேவகி கருணாகரனின் புத்தக வெளியீட்டு விழா 27/4/2014 அன்று Carrington Church ஹாலில் மாலை 5.15 மணிக்கு நடை பெற்றது. அவர்களின் அழைப்பிதழை ஏற்று நானும் சென்றிருந்தேன்.  வைத்திய கலாநிதி கருணாகரன், திருமதி தேவகி கருணாகரன் தம்பதிகள் மண்டப வாசலில் நின்று அவர்களது அழைப்பை ஏற்று  வந்தோரை வரவேற்றார்கள்.

DSC_0451
Chief guest Espo arrives

நிகழ்ச்சி அழைப்பிதழில் அறிவித்தது போல, சரியாக 5.15 மணிக்கு  ஆரம்பமானது. வைத்திய கலாநிதி  பொன்மயிலநாதன் கேதீஸ்வரன் அவர்கள் எலோரையும் திருமதி தேவகி கருணாகரனின் குடும்பம் சார்பில் வரவேற்றார்.  மங்கள விளக்கு ஏற்றி நிகழ்ச்சி ஆரம்பித்து வைக்கப்பட்டது.

book launch picture 1
Dr. Ketheswaran Ponmailainathan

திருமதி தேவகி கருணாகரனின் பேரப்பிள்ளைகள், பெறா பேரப்பிள்ளைகள்  அனைவரும் சேர்ந்து ஆஸ்திரேலிய தேசிய கீதத்தை இசைத்தார்கள். அதனைத் தொடர்ந்து தமிழ் தாய் வாழ்த்தை திருமதி திலகா பிரபாகரன் அவர்கள் தனது கணீர் என்ற குரலில் மிகவும் இனிமையாக பாடினார். அதனைத் தொடர்ந்து ஈழப் போரில் உயிர் நீத்தோருக்காக ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

book launch picture 2
Saranya, Avanthi, Anjali  Vidthya
DSC_0462
Thilaka Pirabakaran

Continue reading “அன்பின் ஆழம் புத்தக வெளியீடு”

உயர்ந்த மலை

டிக்கட் இல்லாவிட்டால் என்ன ஏதாவது குறுக்கு வழியாலே நிலையத்திற்குள் அவன் போய்விடலாம். பல தடவை அதைச் செய்திருக்கிறான். ஆனல் தொலைந்த அந்த பர்சிலே தானே ஆயிரத்து முந்நூறு டொலர் வைத்திருந்தான்.

கேதீஸ் பதட்டப்படாதே! நாங்கள் போய் திரிந்த இடங்களில் தேடிப் பார்ப்போம்,” எனக் கூறிய வின்சன் அவனை அழைத்துக் கொண்டு அவர்கள் போய் திரிந்த எல்லா இடமும் தேடினர். ஒரு மணித்தியாலம் போலத் தேடி பர்ஸ் கிடையாதபடியால், பக்கத்திலிருந்த கிங்ஸ் கொரஸ் பொலீஸ் நிலையத்தில் ஒரு என்ட்ரியைப், போட்டுவிட்டு ரயிலில் ஏறி தங்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பினர்.

கேதீஸ், வீட்டிற்குப் போய்ச் சேர்ந்த போது விடியற் காலை இரண்டு மணியாகியிருந்தது. எந்தச் சத்தமும் போடாமல் மெதுவாக உள்ளே நுழைந்து படுக்கைக்குப் போனவன் மனதில் பலதையும் எண்ணி வருத்தப்பட்டான்.

கேதீசும் அவன் தங்கையும் தந்தையின் முகமே அறியாமல் வளர்ந்தவர்கள். கேதீஸ் இரண்டு வயதாகவும் தங்கை சுரபி எட்டு மாதக் குழந்தையாகவும் இருக்கும் போது அவர்கள் தந்தை, ஈழத்தின் உள் நாட்டுப்போரில் குண்டடிபட்டு இறந்து விட்டார். அதன்பின்  அவுஸ்திரேலியாவிற்குக் குடிபெயர்ந்து இந்த தாராள மனிதாபிமான அவுஸ்திரேலிய அரசாங்கத்தால், தாய் வசந்தி, ஒரு மருத்துவ தாதியாகப் படித்து பயிற்சியும் பெற்று மருத்துவமனையில் வேலை செய்து,  உழைத்து பிள்ளைகள் இருவரையும் நல்லபடியாக வளர்த்திருந்தாள். இப்போது கேதீசுக்கு 24 வயது. அவன் ஆசைப்பட்ட, ஐ போன் 13 வாங்க, அவன் தாய் இரவு பகலாக கடினமாக உழைத்துச் சேர்த்துக் கொடுத்திருந்த பணம் தான் அது.  சிட்டியில் உள்ள பெரிய ’ஆப்பில்’ கடையில், அவன் விரும்பிய ஐ போன் வாங்கலாம் என்ற எண்ணத்துடன் தான் வின்சடனும் மற்ற கூட்டாளிகளுடனும் சிட்டிக்குப் போயிருந்தான். ஆனால் அவன் விரும்பிய மாதிரி ஐ போன் கிடைக்கவில்லை. சிட்டியில் நண்பர்கள் கூடினால் கேட்கவா வேண்டும் பல களியாட்டங்களில் பொழுதைப் போக்கிய போதுதான் பர்ஸ் தொலைந்திருக்கிறது.

’அம்மா பாவம், பணம் தொலைந்தது தெரிந்தால், அவர் ஏங்கிப் போய் விடுவாவே! இரண்டு வருடத்திற்கு முன் நான் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிளில் நடந்த விபத்தில் எனது முழு வலது கையை இழந்தேன். இந்த பொருத்தப்பட்ட உணர்ச்சியில்லாத  செயற்கைக் கையால் தான் பணத்தைத் தொலைத்தேன்.’ அவன் மனதில் சுய பரிதாபம் மேலோங்கி நின்றது. இப்படி தன் கடந்த கால வாழ்க்கையும் பணம் தொலைந்ததையும் நினைத்தவனுக்கு அன்று இரவு நித்திரையே இல்லை.

காலையில் படுக்கையை விட்டு எழுந்தவன் தைரியத்தை வரவழைத்து கொண்டு நேரே தாயைத்தேடி சமையலறைக்குப் போனான். அதிகாலையிலே எழுந்து மூவருக்கும் மதிய உணவைச் சமைத்து, தன் மதிய உணவு டப்பாவை பாக்கில் போட்டு விட்டு, சமையலறையை சுத்தப்படுத்திக் கொண்டிருந்தாள் தாய், வசந்தி.

கேதீஸ் தன் இடது கையால் தாயின் கழுத்தை அணைத்தபடி ”அம்மா நீங்கள் ஐ போன் வாங்கக் கொடுத்திருந்த காசை பர்சோடு தொலைத்துப் போட்டேன். எல்லாம் எனது இந்த செயற்கை கையால் தான்,” என்றான் கண்கள் கலங்கியபடி.

வசந்தியின் இதயம் ஒருமுறை நின்றுவிட்டு படபடவென அடிக்க தொடங்கியது. அந்தப் பணத்தைச் சேர்க்க அவள் பட்டபாடுகள் நினைவுக்கு வந்தன. ஆனால், கலங்கிய கண்களோடு நின்ற மகனின் முகத்தைப் பார்த்ததும் அவள் தாயுள்ளம் இளகியது. அவனைக் கட்டி அணைத்து முதுகைத் தடவிய விட்டபடி,

“கவலைப்படாதே என்ன செய்வது உனக்கு ஐ போன் 13 கிடைக்கும் அதிர்ஷ்டம் இப்போதைக்கு இல்லை போல,“                         ” என்றாள். 

அந்நேரம் படுக்கையை விட்டு எழுந்து நெட்டி முறித்துக் கொண்டு வந்த மகள் சுரபியிடமும் கேதீசிடமும்,

”எனக்கு நேரமாகிவிட்டது. மறந்திடாமல் இரண்டு பேரும் பிரேக்ஃப்ஸ்ட் சாப்பிடுங்கோ. லன்ச்சும் சமைத்திருக்கிறேன்.” எனச் சொல்லிவிட்டு, அவசரமாக தனது வேலைக்குப் புறப்பட்டுப் போனாள் வசந்தி.

விபத்தில் வலது கையை இழந்ததோடு தன் இயலாமைத் தனத்தை எண்ணி கேதீசின் மனதில் சுய பரிதாபம் நிரம்பி வழிந்தது. தனக்கு எதுவுமே நல்லதாய் நடப்பதில்லை, தன்னையும் ஒரு ஆளாக மற்றவர்கள் மதிப்பதில்லை, என அவன் மனதில் எழுந்த உணர்வுகளால் உளச்சோர்வுக்குள் தள்ளப்பட்டிருந்தான். விபத்திற்குப் பின் சத்திர சிகிச்சை நடந்து அவனுக்குச் செயற்கை கை போட்டாலும், அவன் முன்பு இருந்த இயல்பு நிலைக்கு வரவேயில்லை. இந்த விபத்து கேதீஸ் மூன்றாம் வருடம் சர்வகலாசாலையில் விஞ்ஞானம் படித்துக்கொண்டிருந்த போது நடந்தது. செயற்கை கையால் தன்னால் எழுத இயலாது என்றும் இடது கையால் எழுதவோ கணினியை இயக்கவோ கஷ்டமாக இருக்கிறது எனச் சொல்லி அவன் கலாசாலைப் படிப்பை நிறுத்திவிட்டான். வலது கை விளங்காததால் இடது கையால் வேலைகள் செய்யக் கஷ்டப்பட்டான் அதனால் எந்த வேலைக்கும் போகபிடிக்காது, மன விரக்தியோடு. தாயிக்குச் சுமையாக இருந்தான்.

பர்சோடு பணம் தொலைந்த இரண்டு நாட்களுக்குப் பின் வீட்டில் மூவரும் இரவு உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். கேதீசின் தொலைபேசி ’ஈழத்திருநாடே என் அருமை தாயகமே’ என்ற ரிங் டோனில் ஒலித்தது, மறுமுனையில்

”இது கிங்ஸ் கொரொஸ் பொலீஸ் ஸ்டேசன் அதிகாரி, கேதீசா கதைக்கிறது?” என ஆங்கிலத்தில், கேட்டார்.

”யெஸ், கேதீஸ் தான் பேசுறேன்” எனப் பதிலளித்தான்.

.  ”உங்கள் பர்ஸ் ஒருவரால் கண்டெடுக்கப் பட்டிருக்கிறது அதில் எவ்வளவு பணம் இருந்தது எனச் சொல்லமுடியுமா?”

“ஆயிரத்து முந்நூறு டாலரும் ஒரு பத்தோ பன்னிரண்டு டாலரும் இருந்தது,” என்றான் கேதீஸ்.

”ஒகே, இரண்டு நாளைக்குள் நீங்களே வந்து பர்சையும் பணத்தையும் பெற்றுக் கொள்ளுங்கள்,” என்றார் அதிகாரி

”தாங்க் யு, தாங்க் யு வெரி மச்” என்று தொலைபேசியைத் துண்டித்தான். 

இதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த தாய், வசந்தி,

“பாத்தியா கேதீஸ், இது தான் அவுஸ்திரேலியா! பர்சில் ஆயிரம் டாலருக்கு மேலே பணமிருந்தும் கவனமாக அதை பொலீஸ் ஸ்டேசனில் ஒருவர் கொடுத்திருக்கிறார் என்றா பாரேன். பிரமாதம்! கேதீஸ் நீ தாமதியாமல் போய் பர்சையும் பணத்தையும் எடுத்துக் கொள்” என்றார்,.

அடுத்த நாளே கேதீஸ் பொலீஸ் நிலையத்திற்குப் போய் பர்சைப் பெற்றுக் கொண்டான். பணத்தை எண்ணிப் பார்த்தான், $1300 டாலர் அப்படியே இருந்தது.

”தயவு செய்து இதைக் கண்டெடுத்துக் கொடுத்தவர் யார் என்று சொல்ல முடியுமா? நான் அவருக்கு நன்றி சொல்ல வேணும்,” என ஆங்கிலத்தில் கேட்டான்.

அதிகாரியும் பர்சைக் கண்டெடுத்தவர், ஒரு பெண், பெயர் கியாரா என்றும் அவளது தொலைபேசி இலக்கத்தையும் கொடுத்தார். ’கியாரா கேள்விப்படாத அபூர்வமான பெண்ணின் பெயராக இருக்கிறதே,’ என நினைத்தான் கேதீஸ்.

வீட்டிற்கு வந்ததும் அந்த தொலைபேசி இலக்கத்தை அழுத்தி, கியாராவுக்கு தன்னை அறிமுகப்படுத்தி நன்றி கூறிவிட்டு,

”என் பர்சைப் பத்திரமாக நீங்கள் பொலீசிடம் ஒப்படைத்தது  எவ்வளவு பெரிய விசயம். நீங்கள் என்  நினைவில் எப்போதும் இருப்பீர்கள்,” என ஆங்கிலத்தில் உணர்ச்சியோடு சொன்னான்

மறுமுனையில் படிக்கட்டில் பல மணிகள் உருளுவது போல் கிண் கிண்ணென்று அவளது சிரிப்பொலி ஒலித்தது..

“பர்சைத் தற்செயலாகக் கண்டெடுத்து, அதை பொலீசிடம் கொடுத்தேன். அவ்வளவும் தான்,” என ஆங்கிலத்தில் அவள் பதில் அதே சிரிப்பொலி போல் கணீர் என்ற குரலில் ஒலித்தது…

அவனையும்  அறியாமலே கேதீஸ், “என் அம்மா இரவு பகலாகக் கஷ்டப்பட்டு உழைத்து நான் ஆசைப் பட்ட ஐ போன் 13  வாங்கக்  கொடுத்த பணம்.  எல்லாம் இந்த வலது கையை இழந்த முடவனால் தான், அந்தப் பணம் தொலைந்தது,” என்றான்.

”என்ன முடவனா? வட் டு யு மீன்.?”

”இரண்டு வருடத்திற்கு முன் நான் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளாகி எனது வலது கையை இழந்து, யுனிவேசிட்டி படிப்பையும் கைவிட்டு, திக்குத்திசை இல்லாமல் திரிகிறேன், என்றான்”. அவன் குரலில் ஒரு நடுக்கம் இருந்தது, அழுதுவிடுவான் போலிருந்தது.

”நோ நோ கேதீஸ்! நீ இந்த மனப்பான்மையிலிருந்து வெளியே வரவேண்டும். தொலைத்த பணம் கிடைத்துவிட்டது தானே. கவலைப்படாதே. ம்….அப்ப…….இதைப் பற்றி நாங்கள் ஒரு நாளைக்கு கபேயில் சந்தித்து காபி குடித்துக் கொண்டு கதைக்கலாமே?”             

”ஓம் சந்திக்கலாமே,“ என்றான் உற்சாகத்துடன்.

இருவருக்கும் வசதியான நாளான ஒரு சனிக்கிழமை சட்ஸ்வுட்டில்  இருந்த ’ஸ்டார்பக்ஸ்’ (Starbucks) கபேயில் காலை பத்து மணிக்கு சந்திப்பது என முடிவானது.

அன்று கேதீஸ் தன் உடைகளைக் கவனமாகத் தேர்ந்தெடுத்து அணிந்து கொண்டு, தன் நெளிந்த முடியை மேவி வாரிக் கொண்டான். அவனது இருபத்தி மூன்றாவது பிறந்த நாளுக்கு அம்மா பரிசாகக் கொடுத்திருந்த ரல்ஃப் லொரன் வாசனைத் திரவத்தையும் போட்டுக் கொண்டு புறப்பட்டான்.

கபேக்குள் போனவன் சுற்றும் முற்றும் பார்த்தான். கியாரா யாராகவிருக்கும் எனத் தெரியாமல் முழித்தான். கேதீசின் பர்சில் இருந்த ஓட்டினர் லைசன்ஸ் புகைப்படத்தைப் பார்த்த நினைப்பில் அவனை அடையாளம் கண்டு விட்டு, கியாராவே தன் கையை காட்டி, அழைத்தாள்.

அவளை அணுகிய கேதீஸ் “கியாரா?” எனக் கேட்டபடி முன்னால் இருந்த நாற்காலியில் அமரப் போனவன் திகைத்துப் போனான். அழகே உருவான கியாரா ஒரு சக்கர வண்டியில் அமர்ந்திருந்தாள். ஒருவாறு தன்னை சுதாகரித்துக் கொண்டு, கியாரா நீட்டிய கரத்தை குலுக்க தன் வலது செயற்கை கையை நீட்டியவன் சட்டென பின் வாங்கிவிட்டு இடது கையால் அவள் கரத்தைப் பற்றிக் குலுக்கிவிட்டு, “ஹாய்! கிலாட்டு மீட் யு.” எனக் கூறி அமரப் போனான். கியாரா அணிந்திருந்த அரை பாவாடைக்குக் கீழ் முழங்கால்களுக்கு அப்பால் இரண்டு கால்களும் இல்லாததைக் கண்டு மேலும் வியந்து போனான். வியப்பை வெளியே காட்டாது இருக்கையில் அமர்ந்து கொண்டவனின் மூளையில் ஒரு பொறி தட்டியது. ’சில வருடங்களுக்கு முன் ஒலிம்பிக்ஸ் மாற்றுத்திறனாளி கூடைப் பந்தாட்ட (basketball)  போட்டியில் சாதித்ததாகப் பத்திரிகையின் முன் பக்கத்தில் போட்டிருந்த பெண் போல அல்லவா கியாரா இருக்கிறாள்?’. பெண்ணின் பெயர் அவன் நினைவுக்கு வரவில்லை.

அவள் முன்னால் அமர்ந்தவன் கியாராவை அவதானித்தான். வெள்ளை அவுஸ்திரேலிய பெண்ணகத் தெரியவில்லை. ஆனால் சுமாரான வெள்ளை நிறத் தோல், கரிய விழிகள், அழகான வளைந்த புருவங்கள், சின்ன சப்பட்டை நாசியும், செம்பாடும் கறுப்பும் கலந்த சுருண்ட முடியை நெற்றியினின்றும் பின்னால் வாரிக் கட்டி, அழகு ததும்ப அமர்ந்திருந்தாள்.

”ஃப்லட் வைட்டா? அல்லது கப்பச்சீனாவோ?” என மென்சிரிப்போடு கேட்க, அவளின் சற்று எடுப்பான முன் வெண் பற்கள், சிவந்த உதடுகளுக்கு இடையே தெரிய அவள் அழகுக்கு அழகு சேர்த்தது.

”கப்பச்சீனோ பிளீஸ்,” என்றான்.

 இரண்டு கப்பச்சீனோ ஓர்டர் பண்ணிவிட்டு,

 ”கேதீஸ்! என் யூகிப்பு சரியாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன். நீ சிறீலங்காவைச் சேர்ந்த தமிழன் தானே?”  கேட்டாள் கியாரா.

”யெஸ்” எப்படிக் கண்டுபிடித்தீர்கள்?”,  

படிக் கட்டில் மணிகள் உருளும் அதே சிரிப்பு ஒலித்தது. ”உன் தோலின் நிறத்தையும், உன் முக அம்சங்களையும் வைத்துத் தான். அது மட்டுமில்லை எனக்கு சில சிறீலங்கன் நண்பர்களும்.இருக்கிறார்கள். கேதீஸ்! உன் பெயருக்கு ஏதாவது அர்த்தம் இருக்கா?  எமது அவுஸ்திரேலிய பழங்குடி மக்களின் மொழியில் ’கியாரா’ என்றால் உயர்ந்த மலை என்று அர்த்தம்.” 

“அப்படியா! எங்கள் இந்து தமிழர்களின் கடவுளான லார்ட் சிவாவைப் பல பெயர்களால் அழைப்பார்கள். அதில் ஒரு பெயர் கேதீஸ்வரன், நான் அதைச் சுருக்கி கேதீஸ் என வைத்திருக்கிறேன்,” என்றான். 

“ஒரு விதத்தில் நீயும் என்னைப் போல் ஒரு மாற்றுத்திறனாளி தான். நீ யூனிவெசிட்டி படிப்பை விட்டுப்போட்டு இப்போது என்ன செய்யிறாய்.?

ஒரு கணம் தாமதித்த கேதீஸ், தன் செயற்கை கையை உயர்த்திக் காட்டி, ”இந்த முடவனால் என்னதான் செய்ய முடியும்,” என அவனையும் அறியாமல் தன் இயலாமையை விளக்கினான்.

”கேதீஸ்! நீ முடவனுமில்லை, ஊனமுற்றவனுமில்லை.!! நீயும் என்னைப் போல் ஒரு மாற்றுத்திறனாளி! அதை முதலில் புரிந்துகொள். இது உன் மனதில் பதிந்து விட்டால் எதையும் சாதிக்கலாம். மேலும் நீ மன உறுதியோடும் கட்டுப்பாட்டோடும் கூடவே கடின உழைப்போடு இருந்தால் உயர் சாதனையாளர்கள் போல் நீயும் சாதிக்கலாம். நாங்கள் இருவரும் மாற்றுத்திறனாளிகள், எங்களிடம் பல தனித்திறமைகள் இருக்கின்றன. அதை வெளிக் கொணர்ந்து சாதிக்க வேண்டும்.` என்றாள் குரலில் உறுதியோடு.

ஒரு கப் கப்பச்சீனோ இரண்டு கப்பச்சீனோவாகியது. நேரம் போவது தெரியாது இருவரும் பல விசயங்களைப் பற்றிப் பேசினர். இருவருக்கும் பிரபல பாடகரான கைய் செபஸ்டியனின் (Guy Sebastian) பாட்டு மிகவும் பிடித்திருந்தது.

“அவருடைய ’ஸ்டாண்டிங் வித் யு’ அல்பம் எனக்கு மிகவும் பிடிக்கும்”. என்றாள் கியாரா.

”எனக்கும் தான். அதோடு சில தமிழ்ப் பாட்டுகளும் பிடிக்கும் என்றான் கேதீஸ்..

“அப்படியா, எனது சிறீலங்கன் நண்பி அடிக்கடி ஒரு பாட்டுக் கேட்பாள். அதன் மெட்டு எனக்குப் பிடித்திருந்தது,” என ஏ ஆர் ரஹ்மானின் சின்னச் சின்ன ஆசை மெட்டை முனகினாள்”

”சுப்பர்! எனக்கும் அந்தப் பாட்டுப் பிடிக்கும். அடிக்கடி போனில் கேட்பேன்.” என்றான் உற்சாகத்துடன்.

  இருவருக்கும் பிடித்த உணவு வகைகளைப் பற்றிக் கதைத்த போது இருவருக்கும் இத்தாலிய நாட்டு பீட்சாவும், ஸ்பெயின் நாட்டுப் பயலா உணவும் பிடித்திருப்பது தெரிந்தது.

கியாராவிடம் விடை பெற்று வீட்டுக்குத் திரும்பியவன் உடனே தன் கணினியைத் திறந்து கியாராவின் பெயரைக் கூகுளில் தேடினான். ’கியாரா டானியல்ஸ் கூடைப்பந்தாட்ட சாம்பியன்’ என்ற தலைப்புக்குக் கீழ் அவன் சற்று முன் சந்தித்த கியாரா மென்சிரிப்போடு கூடைப்பந்தாட்ட உடையோடு சக்கர வண்டியில் காட்சியளித்தாள்.

தலைப்புக்குக் கீழ் எழுதியிருந்ததை அவசர அவசரமாக வாசித்தான். ’மார்ச் 2018 ஆண்டில் கொரியன் குடியரசு நாட்டின் பியொங்சாங் இல் நடந்த பாராலிம்பிக் கூடைப்பந்தாட்டப் போட்டியின் அணியின் இளைய உறுப்பினரான கியாராவின் திறமையால் அவுஸ்திரேலிய அணி வெற்றி கண்டது,’ என எழுதியிருந்தது. இதற்குக் கீழ் கியாராவைப் பற்றிய முழு விவரமும் போட்டிருந்தார்கள். அதையும் ஆவலோடு வாசித்தான் கேதீஸ்.

’கியாரா அவுஸ்திரேலியாவின் பூர்வீக குடி பெண்ணுக்கும் டானியல்ஸ் என்ற அவுஸ்திரேலிய போத்துக்கேயருக்கும் 1998 ஆண்டில், மேற்கு அவுஸ்திரேலியாவின் போர்ட் ஹெட்லண்டில் பிறந்தாள். பிறக்கும் போதே முழங்காலுக்குக் கீழ் இரண்டு கால்களும் வளர்ச்சி இல்லாமல் தான் பிறந்தாள். அவளுடைய பெற்றோர் மற்ற உடன் பிறந்தோரோடு எந்தப் பாகு பாடும் சலுகையும் காட்டாமல் வளர்த்தார்கள். கியாரா சிறு வயது முதல் துடிப்போடும் கலகல்ப்பாகவும் இருந்தாள். நடக்கிற வயது வந்ததும் செயற்கை கால்கள் பொருத்தப்பட்டது. எட்டு வயது மட்டும் பொருத்தப்பட்ட கால்களோடு நடந்தவள் அது பிடிக்காது ஸ்கேட் போர்டில் (சறுக்கு பலகையில்) எல்லா இடமும் போய் வந்தாள். பெற்றோர் சக்கர வண்டி வாங்கப் போனப்  போது, கியாரா, ’எனக்கு வேண்டாம். அது ஊனமுற்றவருக்குத்தான், அதில் போவதற்கு எனக்குச் சங்கடமாக இருக்கிறது,’ எனக் கூறி சறுக்குப் பலகையிலே எங்கும் போய் வந்தாள். 

அவளது பள்ளிக்கூடத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற விளையாட்டுகள் இருந்தது. பதினான்கு வயதில் விளையாட்டுப் போட்டிகளில் பங்கு பற்ற மாணவர்களைத் தேர்ந்தெடுக்கும் நேரம் வந்தபோது, அவள் மனதில் எழுந்த ஏதோ ஒரு உணர்வு சக்கர வண்டி கூடைப்பந்தாட்டத்தில் சேரும் எண்ணத்தை ஏற்படுத்தியது. பல வருடங்கள் கியாரா கையை உந்தி உந்தி சறுக்குப் பலகையில் பயணித்து அவள் உடம்பின் மேற்பகுதியும் இரு கரங்களும் உரம் பெற்றிருந்ததால் சக்கர வண்டி விளையாட்டில் சக மாணவர்களிற்குள் முன்னணியில் நின்றாள்.

விளையாட்டில் இவ்வளவும் சாதித்தவர் படிப்பிலும் சளைத்தவர், அல்ல. பி. ஏ பட்டம் பெற்று கியாரா இப்போது எம். பி. ஏ செய்து கொண்டிருக்கிறார்,’ என ஒரே மூச்சாக வாசித்து முடித்தான்.

அப்பாடி பிறவி முதல் இரண்டு கால்களும் இல்லாமலே இந்த இளம் வயதில் இவ்வளவும் சாதித்திருக்கிறாளே!! கியாரா, நீங்கள் ஒரு அற்புதப் பிறவி!   கேவலம் ஒரு கையை இழந்து விட்டேன் என்று சுய பரிதாபம் மேலிட்டு, படிப்பையும் பாதியில் விட்டு விட்டு வேலைக்கும் போகாமல், என் ஒற்றைத் தாயிக்கு (சிங்கில் மதருக்கு) பாரமாக இருக்கிறேனே,’ என மனதுக்குள் தன்னை நொந்து கொண்டான்.

இரண்டு நாள் கழித்து கியாராவே அவனை தொலைபேசியில் அழைத்து,

“ஹாய்! கேதீஸ்!, ஹவ் ஆர் யு? என்ன புது மொபைல் வாங்கி விட்டியா?” எனக் கேட்டாள்.

”இல்லை. ஐ போன் 13 இப்போதைக்கு எனக்குத் தேவையில்லை,” எனச் சலிப்போடு சொன்னான்.

”சீயர் அப் கேதீஸ்!! எனக்குத் தெரிந்த ஒரு ஸ்பானிஷ் ரெஸ்டோர்ண்டிலே எங்கள் இரண்டு பேருக்கும் பிடித்த மிகவும் சுவையான பயாலா, இரவைக்குச் சாப்பிடலாம் வாரியா? பிளீஸ் வா எனக் குழைந்தாள்.

’”ஓம் வாறேன்.” என்றான் உசாராக.

கியாரா ரெஸ்டோரண்டின் பெயரையும் கூறி ஏழு மணிக்குச் சந்திப்போம் எனச் சொன்னாள். 

சரியாக இரவு ஏழு மணிக்கு ’என்காசா’ என்ற ஸ்பனிஷ் ரெஸ்டோரண்டிற்குள் நுழைந்தான். அங்கு அவனுக்காக் கியாரா காத்திருந்தாள். 

கியாராவைக் கண்டதும் கேதீஸின் உடம்பில் ஒரு புத்துணர்ச்சியே எழுந்தது. 

”நான் தாமதித்து வந்துவிட்டேனா?” எனக்கேட்டபடி கியாரா முன் அமர்ந்தான்.

‘’உன்னைச் சந்திக்கிற ஆவலில் கொஞ்சம் முன்னமே வந்துவிட்டேன்”  என்றாள் கியாரா, அவளுக்கே உரித்தான சிரிப்போடு.

இருவரும் சாப்பிட்டுக்கொண்டு, உணவுகள், சினிமா, தங்கள் தங்கள் குடும்பங்கள் பற்றியும் கதைத்தார்கள்.

கேதீஸ் அவனை அறியாமலே, ”கியாரா! நானும் எனது தங்கை சுரபியும் இளம் வயதிலே தகப்பனை இழந்து விட்டோம். எமது தாய் தான் கஷ்டப்பட்டு வேலை செய்து எங்களை வளர்த்து இந்த நிலைக்குக் கொண்டு வந்திருக்கிறார்,” என மனம் திறந்து தன் குடும்பத்தை பற்றிச் சொன்னான்.

“கேதீஸ் உன் அம்மா இந்த இருபத்தி ஓராம் நூற்றாண்டில் மறுமணம் செய்யாமல் உங்களுக்காக வாழ்ந்திருக்கிறாள். ஷி இஸ் கிரேட்” என்றாள் கியாரா.

”ஓம், அம்மா எங்களுக்காத் தான் வாழ்கிறா.” என்றவனின்  குரல் சற்று நடுங்கியது

சாப்பிட்டு முடிந்ததும் தன் மனதிலிருந்ததை சொல்லுவதற்குக்காக் காத்திருந்த கேதீஸ்,

. ”கியாரா! உங்களை முதலில் சந்தித்தபோது நீங்கள் பராலிம்பிக் ஸ்டார் என்று எனக்குத் தெரியாது. கூகுளுக்குள் போய் உங்களைப் பற்றி அறிந்து கொண்டேன். முழங்காலிற்குக் கீழ்க் கால்கள் இரண்டும் இல்லாமல் தன்னம்பிக்கையோடு இவ்வளவும் சாதித்திருக்கிறீர்கள். எனக்கு நீங்கள் ஒரு இன்ஸ்பிரேஷன் (inspiration). என் செயற்கை கையைப் பார்த்து இரும்புக் கைக்காரன், பையோனிக் மான் என யூனிவசிட்டியில் சக மாணவர் மாணவிகள், எனக்குப் பின்னால் தங்களுக்குள் கதைத்துச் சிரித்தார்கள். குரூப் படிப்பு நடக்கும் போது சக மாணவிகள் எனக்குப் பக்கத்தில் இருக்கத் தயங்கினர். சுருங்கச் சொன்னால் ஒரு சக மாணவனாகக் கருதாமல், வேறு உலகத்தை சேர்ந்தவனாகப் பார்த்தார்கள். அதோடு இடது கையால் கணினியை இயக்க மிகவும் கஷ்டப்பட்டேன். இதை எல்லாம் என்னால் தாங்க முடியாமல், யூனிக்குப் போகப் பிடிக்காமல் யூனி படிப்பை விட்டு விட்டேன். படிப்பை நிறுத்தியதோடு என் தன்னம்பிக்கையும் இழந்தேன்! என் எதிர்காலத்தையும் என் தாயின் நிம்மதியைக் கெடுத்துவிட்டேன்!.”

”கேதீஸ், எம்மை பழிக்கிறவர்களுக்கு  நாம் வெற்றிகரமாக வாழ்ந்து காட்ட வேண்டும். உதாரணத்திற்கு என்னை எடுத்துக் கொள். ஐந்து வயதில் பள்ளிக்கூடத்திற்கு இந்தக் கால்களுடன் போன என்னை சக மாணவர்கள், உன்னைப் பார்த்தது போல் ஒரு காட்சிப் பொருளாகப் பார்த்தார்கள். வகுப்பில் நான் என் முழங்கால்களில் நடக்கும் போது சிலர் தங்கள் காலைப்போட்டு, இடறி என்னை விழவைத்து ரசித்தார்கள். ஆனால் நான் அவற்றைப் பொருட்படுத்துவதில்லை. தொடர்ந்து படித்தேன்”

”என்ன! உங்கள் முழங்காலிலா பள்ளியில் நடந்து திரிந்தீர்களா?”

 ”ஓம், வீட்டில் எப்படி நடந்து திரிந்தேனோ அப்படியே பள்ளிக்கூடத்திலும் நடந்து திரிந்தேன். யாருடைய வாழ்க்கையில் போராட்டம் இல்லை. மலைபோல் பிரச்சனைகள் வந்தாலும் நாம் மனம் வைத்தால் அதைத் தகர்த்து எறிய முடியும். இடையூறுகளை எதிர்கொண்டு வாழ்வதில் ஓர் மனத்திருப்தியும் பெருமையும் இருக்கிறது. உன் தாழ்வு மனப்பான்மையினின்றும் உளச்சோர்விலிருந்தும் நீ வெளியே வரவேண்டும். பாதியில் விட்ட உன் படிப்பை மீண்டும் மேற்கொள்ள வேண்டும்.”

”உன்னைப் பற்றி உன் சாதனைகளைப் பற்றி கூகுளுக்குள் போய்  அறிந்தபின், எனக்கு ஒரு தன்னம்பிக்கை வந்தது. உடனேயே என் விஞ்ஞானப் படிப்பைத் தொடர்வதற்கு, நீ, எம். பி. எ செய்கிற அதே சிட்னி யூனிக்கு விண்ணப்பித்துவிட்டேன்.”

 ”ஓ கேதிஸ்!  இது நல்ல செய்தி.” 

“கியாரா!! என்னுடைய இந்த மாற்றுத்திறனாளி பயணத்தில் நீ என் கூடவே இருப்பாயா?”  

”நிச்சயமாகக் கேதீஸ்!!” என மேசை மேலிருந்த அவன் இடது கையை ஆதரவாகப் பற்றியபடி கூறினாள். இருவர் கண்களும் ஒரு நிமிடம் சந்தித்தன. வார்த்தையால் சொல்லாததை அந்த நான்கு கண்களும் பேசின. சட்டென்று இருவரும் கண்களைத் தாழ்த்திக் கொண்டனர்.

”கேதீஸ் வருகிற சனிக்கிழமை மொஸ்மனில் உள்ள என் வீட்டுக்கு லஞ்சுக்கு வரமுடியுமா? உன்னைப் பற்றி என் பெற்றோரிடம் சொல்லியிருக்கிறேன். அவர்களும் உன்னைச் சந்திக்கப் பிரியப் படுகிறார்கள்.” எனக் கேட்டாள்.

 ”ஓம் கட்டாயமாக!  நானும் என் அம்மாவிடம் உன்னைப் பற்றிச் சொல்லியிருக்கிறேன். அவவும் உன்னைச் சந்திக்க விருப்பப்படுகிறார். ஒரு ஞாயிறு என் வீட்டுக்கு நீயும் சாப்பிட வரவேனும் கியாரா?” எனத் தன்னம்பிக்கையோடு கேட்டான்.

”ஐ வில் லவ் இட்!! ஒற்றைத்தாயாக உன்னையும் உன் தங்கையும் இந்த நிலைக்கு வளர்த்துவிட்ட அந்த தைரியசாலி அம்மாவைச் சந்திக்க ஆவலோடும் ஆசையோடும் இருக்கிறேன்.” கியாராவின் வார்த்தைகள் கேதீஸுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது.

கியாராவும் கேதீஸும் அடிக்கடி சிட்னி பல்கலைக்கழகத்தில் சந்திப்பதோடு நின்றுவிடாமல். இரண்டு குடும்பமும் சேர்ந்து உல்லாச பயணங்கள் போவதுமாக நாட்கள் கடந்து போயின. நாட்கள் வருடங்கள் ஆயின. நண்பர்களாகப் பழகிய கேதீசுக்கும் கியாராவுக்குமிடையே காதல் மலர்ந்தது. கேதீசின் தாய் வசந்தி முதலில் இரண்டு காலில்லாத பெண்ணென்ற நினைப்போடு பரிதாபத்தோடுதான் பழகினார். ஆயினும் கியாரா இரண்டு கால்கள் இல்லாவிட்டாலும், சக்கர வண்டியில் அமர்ந்தபடி வீட்டு வேலைகளையும் செய்து, மேற் படிப்பையும் மேற்கொண்டு, விளையாட்டு வீராங்கனையாக அவள் சாதித்ததையும் பார்த்து, வசந்திக்கு, கியாரா மேல் மதிப்பும், மரியாதையும் ஏற்பட்டது.

கேதீஸ், இரண்டு வருடத்தில் தனிச் சிறப்போடு பட்டம் பெற்றுப் பெரிய நிறுவனத்தில் வேலைக்கும் போகத் தொடங்கி விட்டான். பேய்ஜீங்கில் 2022 மார்ச் மாதத்தில் நடைபெறும் பாராலிம்பிக் கூடைப்பந்தாட்டத்தின் அவுஸ்திரேலியாவின் அணிக்கு கியாரா தலைமை வகிப்பாரென்றும், விரைவில் அவருக்கும் கேதீஸ் என்ற மாற்றுத்திறனாளிக்கும் காதல் திருமணம் நடக்கவிருப்பதாக ஊடகங்களில் பத்திரிகைகளிலும் வெளிவந்தன. கியாராவின் அழகிய முகத்தில் சந்தோசப் பூரிப்போடும் அவள்  பக்கத்தில் தன்னம்பிக்கையோடு கியாராவின் தோளைத் தனது செயற்கைக் கையால் அணைத்தபடி கம்பீரமாக நிற்கும் கேதீசினதும் புகைப்படங்கள் அவுஸ்திரேலியாவின் பத்திரிகைகளின் முன் பக்கத்தை அடிக்கடி அலங்கரித்தன.

சுவர்ணபூமி

”அம்மா அப்போது இரவு ஏழரை மணியாகிவிடுமே?” எனக் கேட்டான்.

”ஓமடா ஆனால் நீ மறந்திட்டியா, சிட்னியில் சூரியன் உதித்து  மூன்று மணி நேரத்திற்கு பின்தான் பாங்கொக்கில் சூரியன் உதிக்கும் ஆகையால் மாலை நாலரை மணியாகத் தான் இருக்கும்.” என்றேன்.

      விமானம் மேலே எழுந்து பறக்கவும் குகன் ஜன்னலின் ஊடாக வெளியே தெரிந்த காட்சிகளைப் இரசித்தபடி அமர்ந்திருந்தான். விமானப்  பணிபெண் குகனுக்கு கலரிங் புத்தகமும், பென்சில்களும் கொடுத்தாள். அவன் ஆவலோடு கலர் பண்ணத் தொடங்கவும் என் இருக்கையைச் சாய்த்து அமர்ந்து கண்களை மூடிக் கொண்டேன். என் கடந்த கால வாழ்க்கை மனக்கண் முன் திரைப்படமாக ஓடியது.

***********

       பன்னிரண்டு வயதில் என் பெற்றோருடன் 1988 ஆம் ஆண்டில்  போரினால் பாதிக்கப்பட்டுச் சிதைந்த எமது தாய் நாடான சிறிலங்காவை விட்டு சகல வாய்ப்புகளும் நிறைந்த சிட்னி நகரத்திற்குக் குடிபெயர்ந்தோம். இங்கு பள்ளிக்கூடம் போகும் போது மேலே பறக்கும் வானுர்திகளிலிருந்து செல் அடிக்கிறார்கள் என உயிருக்குப் பயந்து பங்கர்களுக்குள் ஓடத் தேவையில்லை. நிம்மதியாகப் படிப்பிலே கவனம் செலுத்தக் கூடியதாவிருந்தது. பள்ளிக்கூடத்தின் இறுதி ஆண்டு பரீட்சையில் உயர்ந்த மார்க்கோடு தேறியதால் எனக்கு நியுவ் சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் வர்த்தகமும் நிதியும் படிக்க இடம் கிடைத்தது. நான்கு வருட முடிவில் தனிச்சிறப்புடன் தேறியதால் எனக்கு வெளிவிவகாரமும் வர்த்தகமும் துறை இலாகாவில் வேலையும் கிடைத்ததது. அங்கு வேலை செய்யும் போது அந்த இலாகாவின் பரிந்துரையினால் பகுதிநேரமாகச் சர்வகலாசாலையில் படித்து சர்வதேச உறவில் முதுகலைப் பட்டமும் பெற்று அதே இலாகாவில் பதவி உயர்வும் கிடைத்தது.

   அப்போது எனக்கு இருபத்தைந்து வயது முடிந்திருந்தது. நான் பொது நிறமென்றாலும், மூக்கும் முழியுடனும், அழகாகத்தான் இருந்தேன். என் பெற்றோர், சிட்னியில் வசிக்கும் தங்களுக்குத் தெரிந்த, ரகுவரனை என் வருங்கால கணவராகத் தேர்ந்தெடுத்தார்கள். சாதகம், மற்ற பொருத்தங்கள் பார்த்தபின் என்னையும் ராகுவரனையும் அறிமுகம் செய்து வைத்தார்கள். ரகுவரன் எ.எம்.பி என்ற பெரிய நிறுவனத்தில் கணக்காளராக இருந்தார், ஆறு அடி உயரமாகவும் நிறமாகவும் இருந்தார்

 ஆறு மாதமாக நாங்கள் அடிக்கடி சந்தித்துப் பேசிப் பழகியதில்  இருவருக்கும் ஒருத்தரை ஒருத்தர் பிடித்துக் கொண்டதால் எங்கள் திருமணம் இனிது நடந்தது. வாடைகைக்கு ஒரு அபார்ட்மெண்ட்டை எடுத்துக் கொண்டு இருவரும் குடிபுகுந்தோம்.

எங்கள் வாழ்க்கை சந்தோசமாக ஓடியது. சரியாக பத்து மாதத்தில் குகனும் பிறந்தான். ஒரு வருடம் பிள்ளைப் பேறு லீவில் இருந்தேன். பின்பு குகனை அம்மாவுடன் விட்டுவிட்டு வேலைக்குப் போனேன்.

ரகுவரன் எப்போதவது கூட்டாளிகளோடு சேர்ந்து மது அருந்துவார் என்பது எனக்குத் தெரியும். ஆனால் இப்போது தினமும் வேலை முடிந்ததும் கூட்டாளிகளோடு குடிப்பதற்கு பப்புக்கு போய் மது அருந்திவிட்டு இரவு பத்து பதினொரு மணிக்கு மேல் வீடு திரும்புவது வழமையாகியது. காலையில் எழுந்து வேலைக்குப் போக இயலாமல், லீவ் போடுவார். இதனால் வேலையிலிருந்து நீக்கப்பட்டார். குடிப்பழக்கத்தை விடச் சொல்லி நானும் எல்லோரும் சொல்லிப் பார்த்தோம். ஆனால் அவர் கேட்கவில்லை. இது மட்டுமில்லை இவர் கசினோவுக்கும் சூதாடப் போவார். போக்கர் மெசினில் சூதாடி காசெல்லாம் இழந்து வீடு வந்து சேர்வார். மது வாங்கக் காசில்லாமல் என்னிடம் வந்து கேட்பார். நான் காசு கொடுக்க மறுத்தால் என்னை அடித்துத் துன்புறுத்துவார். இங்கே அவுஸ்திரேலியாவில் தானே டொமஸ்டிக் வயலன்ஸ் சட்டத்தின் கீழ் காவல் அதிகாரிகளிடம் புகார் கொடுக்கலாம். எனது பெற்றோர் அதைத்தான் செய்தார்கள். காவல் துறையினர் வீட்டுக்கே வந்து ரகுவரனிடம், `மேலும் வன்முறை செய்தால் கைது செய்யப்படுவார்,` என எச்சரிக்கை கடிதம் கொடுத்தார்கள் `என்னால் அவருடன் இனிமேல் ஒன்றாக வாழ முடியாது,` எனக் கூற, அபார்மண்ட் வாடகை நான் கட்டுவதால், ரகுவரனை வேறு வீட்டுக்கு போகுமாறு கூறினார்கள், ரகுவரனும் தன் பெற்றோர் வீட்டிற்கு போய்விட்டான்  

ரகுவரனிடம் இணக்கமான விவாகரத்து கோரினேன். ரகுவரன் அதைத் தர மறுத்ததால் குடும்ப நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து ஒரு வருடத்திற்குப் பின் தான் விவாகரத்து கிடைத்தது. வேலையில்லாததாலும் குடிப்பழக்கத்தோடு சூதாடுவதாலும் ரகுவரனால் நான்கு வயது மகனைப் பொறுப்பாகப் பார்த்துக் கொள்ள முடியாது என நீதிமன்றம் தீர்மானித்து, தாயான என்னிடம் குகனை பராமரிக்கும் முழுப் பொறுப்பும் ஒப்படைக்கப் பட்டது. மாதத்தில் ஒரு நாள் பொது இடத்திலே குகனை, ரகுவரன் சந்திக்கலாம், என்றும் அப்போது நான் சற்றுத் தள்ளி இருந்து கண்காணிக்கலாம் எனத் தீர்ப்பு வழங்கப்பட்டது.

விவாகரத்துக்குப் பின்னும் நான் வேலைக்கும் போய் வரும் போது என்னிடம் காசு கேட்டு தொந்தரவு கொடுத்தார். ரகுவரனைப் பார்க்க பரிதாபமாகவிருந்ததால், முதலில் என் கைப்பையில் இருந்த காசை கொடுத்தேன். இப்படியே கொடுக்க முடியுமா?` ஆகையால் மறுத்து விட்டேன். `காசு கொடுக்கா விட்டால் குகனை தூக்கிக் கொண்டு போய் விடுவேன்,’ என என்னை மிரட்டினான். காவல் துறையிடம் முறையிட்டேன். அவர்கள் ’இப்படி உன் முன்னால் மனைவியை மிரட்டினால் உன்னை கைது செய்ய வேண்டி,` வரும் என எச்சரித்தனர்.

எனினும் வேலைக்குப் போகும் வழியில் என்னுடன் சுமுகமாகப் பேசி, நாங்கள் இருவரும் ஒன்றாய் சேர்ந்து வாழலாமா எனக் கேட்டான்.

அவருடைய இந்த தொந்தரவுகளைப் பொறுக்க முடியாமல் தாய்லாந்தின் அவுஸ்திரேலியா தூதரகத்தில் ஒரு வேலைக்கு விண்ணப்பித்தேன். வேலையும் கிடைத்து இப்போது தாய்லாந்தின் தலை நகரமான பாங்கொக்கிற்கு என் மகனுடன் விமானத்தில் பறந்து கொண்டிருக்கிறேன். இந்தப் பயணத்தை மேற்கொள்வதற்கு நான் பட்ட கஷ்டம் அப்பப்பா!. முதலில் குகனுக்குக் கடவுச்சீட்டு எடுக்க வேண்டியிருந்தது. அதற்குக் குகனின் தந்தையின் கையொப்பம் வேண்டியிருந்தது. ரகுவரன் கையொப்பம் கொடுக்க மறுத்து விட்டார். ஆகையால் வக்கீல் மூலம் தான் ஒரு மாதம் கழித்து கையொப்பம் வைத்தார்.

இங்கு அவுஸ்திரேலியாவில் ஒரு பெற்றோர் மற்ற பெற்றோரின் சம்மதம் அல்லது நீதிமன்றத்தின் உத்தரவு இல்லாமல் தங்கள் குழந்தையுடன் வேறு நாட்டிற்கு இடம்பெயரவோ வேலையாகவோ போக முடியாது. ஆகையால் எனது உத்தியோக நியமனமான கடிதத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து குகனை என்னுடன் தாய்லாந்து அழைத்துக் கொண்டு போக அனுமதி கோரினேன். அனுமதியும் கிடைத்தது, ஆனால் ஒரு வருடத்திற்கு ஒரு முறை குகனை சிட்னி கூட்டிக் கொண்டு வந்து தந்தையுடன் சில பொழுதுகள் கழிக்க விட வேண்டும் என்ற நிபந்தனையுடன் அனுமதி கிடைத்தது. இதற்குமே ஆறு மாதம் எடுத்தது.

இதற்குப் பின்தான் பிரயாணத்திற்கு வேண்டிய ஏற்பாடு எல்லாம் செய்து விமான நிலையம் வரை அப்பாவும் அம்மாவும் வந்து வழியனுப்பி விட்டார்கள்.  குடியேற்றப் பகுதியிலிருந்த அதிகாரியிடம் குகனை என்னுடன் வெளியூர் கூட்டிக் கொண்டு போகலாம் என்ற அனுமதியைக் காட்டினேன். அதை உள்ளே கொண்டு போனவன் அரை மணித்தியாலத்திற்கு வெளியே வரவில்லை. எங்களைத் தடுத்து நிறுத்தப் போகிறார்களோ? எனக்கு வியர்த்துக் கொட்டிவிட்டது. வெளியே வந்தவர் பார்ஸ்போர்ட்டுகளை ஸ்டாம்ப் பண்ணித் தந்தார். குகனும் நானும் ஃப்லைய்ட்டை தவற விட்டிடுவோமோ என கைப் பைகளை இழுத்துக் கொண்டு ஓடாத குறையாக போய் விமானத்தில் ஏறினோம்.

*********

பக்கத்திலே அமர்ந்திருந்த என் மகன் குகனை அணைத்துக் கொஞ்சியபடி, ”செல்லம். எங்களுக்கு மதிய உணவு கொண்டு வரப் போகிறார்கள் போலிருக்கிறது,” எனவும் விமான பணிப்பெண் அவன் உணவை டிரே மேல் வைத்தாள். குகன், ”கபுங்கா கா,” எனத் தாய் மொழியில் நன்றி சொல்லத் தாதியும் புன்னகைத்தபடி ஆங்கிலத்தில் நன்றி சொன்னாள். என்னுடைய உணவும் வரச் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது,

“அம்மா பாங்கொக் ஏயர் போர்ட்டுக்கு என்ன பெயர்?” எனக் கேட்டான்.

‘’2006 ஆம் ஆண்டில் புதிதாகக் கட்டிய விமான நிலையத்தின் பெயர் சுவர்ணபூமி,” என்றேன்.

“அம்மா! பூமி எங்கள் தமிழ் சொல்லு தானே?” எனக்  கேட்டான்.

குகனுக்கு வீட்டில் தமிழ் கற்றுக் கொடுப்பதோடு சனிக்கிழமைகளிலும் தமிழ்ப் பள்ளிக்கு அனுப்புவேன். அவன் நன்றாகத் தமிழ் பேசுவான். இங்கு பாங்கொக்கில் நான் தான் இனி அவனுக்குத் தமிழ் படிப்பிப்பேன்…     

“ஓமடா இதைக் கட்டியவர் தாய்லாந்தின் முன்னாள் மன்னன் இராமா IX. அவர் பெயர் பூமிபோல் அடுலியடெஜ், (Bhumibol Adulyadej). தனது பூமிபோல் பெயர், பெளத்த தங்க இராச்சியத்தைக் குறிப்பிடுவதால் சுவர்ணபூமி என்ற பெயரை ஏயர் போர்ட்டுக்கு வைத்திருக்கிறார். அது மட்டுமில்லை இன்று தாய்லாந்து பெளத்தர்கள் பெரும்பான்மையாகக் கொண்ட நாடாக இருந்தாலும் தாய்லாந்தின் கலாச்சாரம் மற்றும் சின்னங்களின் பல கூறுகளில் இந்து மதத்தின் தாக்கங்களையும் பாரம்பரியத்தையும் நாங்கள் இங்கு காணலாம்,” என்றேன்.  குகன் “அப்படியா?”  என்றான் எதோ எல்லாம் புரிந்தது போல்.

விமானம் தரை இறங்கியதும், எங்கள் கைப் பைகளை இழுத்துக் கொண்டு வெளியேறினோம். வாசலில் நின்ற ஏயர் ஹோஸ்டசர்கள் இரு கைகளையும் கூப்பி எனக்கு “சுவாடிகா” என்றும் குகனுக்கு “சுவாடிகிராப்” எனக் கூறி வழியனுப்பினார்கள். நாங்களும் “கப்புங்கா,” என்று கூறிவிட்டு இறங்கினோம்.

குடி நுழைவையும் சுங்க இலாகாவையும் கடந்து எங்கள் பெட்டிகளை ரொலியில் வைத்துத் தள்ளிக் கொண்டு போனோம். கண்கள் விரிய பாங்கொக்கின் புதிய விமான நிலையத்தை இரசித்தபடி இருவரும் நடந்தோம். எங்கள் முன்னால் உயரத்திலிருந்த பெரிய சிற்பத்தைப் பார்த்து இருவரும் வியந்துபோனோம். பாற்கடலிருந்து அமிர்தத்தைப் பெறுவதற்காக மந்திர மலையை மத்தாகவும், விஷ்ணு பகவான் ஆமை அவதாரமாக மலையை தாங்கி நிற்க, வாசுகி பாம்பை கயிறாகவும் கொண்டு ஒரு புறத்தில் தேவரும் மறுபுறத்தில் அரக்கரும் சேர்ந்து கடைவதைச் சித்தரிக்கும் சிற்பம் அது. மந்திர மலையின் மேல் தாமரைப் பூவின் நடுவில் விஷ்ணு பகவானின் அழகிய சிற்பம் அலங்கரித்தது. “அம்மா! இது என்ன சிற்பம் எனக் கேட்ட குகன் குறுக்கும் நெடுக்குமாக ஓடி சிற்ப வேலையை இரசித்தான். குகனின் கையைப் பிடித்துக் கொண்டு எக்ஸ்லேட்டரில் ஏறி அருகில் போய் பார்த்தோம். அந்நேரம் தாய் ஏயர்  லைன்ஸ் குழுவினர் சிற்பத்துக்கு மலர்கள் வைத்து விஷ்ணு பகவானின் அருள் வேண்டி வணங்கி விட்டுப் போனார்கள். நாங்களும் வணங்கி விட்டு, நிலையத்தை விட்டு வெளியேறினோம்.

      வெளியே தாய்லாந்தின் ஈரப்பதமான வெப்ப வானிலை எனக்குச் சிறீலங்காவை நினைவூட்டியது அவுஸ்திரேலிய தூதரகத்திலிருந்து வண்டியுடன் ஒரு ஓட்டுநர், என் பெயர் கொண்ட பலகையோடு நின்றான். அவன் அருகே போய் “சுவாடிக் கராப், மதுபாஷினி,” என்றேன். அவனும், “சுவாடி கா! யெஸ் யெஸ் என் பெயர் சக்டா,” என ஆங்கிலத்தில் சொன்னான். எங்கள் ரொலியை சக்டா தள்ள நாங்கள் அவன் பின்னால் போய் காரில் ஏறினோம்..

      குகனும் நானும் தங்குவதற்கு வாடகைக்கு எடுத்திருந்த அபார்மெண்ட் ஒரு பத்து மாடிக் கட்டிடத்தில், எட்டாவது மாடியிலிருந்தது அங்கே போய் இறங்கினதும். எங்களையும் எங்கள் பெட்டிகளையும் மின்தூக்கியில் ஏற்றி அபார்ட்மெண்டுக்கு கொண்டு போய் சேர்த்தான், சக்டா.

      “நாளைக்கு வெள்ளிக்கிழமை உங்கள் இருவரையும் சர்வதேச பள்ளிக்கூடத்திற்கு அழைத்துக் கொண்டு போகுமாறு  பணித்திருக்க்கிறார்க்ள். காலை ஒன்பது மணிக்கு வந்திடுவேன்,” என விடை பெற்றான் சக்டா. தாய்லாந்து போவது என முடிவானதும் அவுஸ்திரேலிய தூதரகமே குகனுக்கு பாங்கொக்கின் சர்வதேச பள்ளிக்கூடத்தில் நாலாம் வகுப்பில் இடம் முன் பதிவு செய்திருந்தார்கள்

      சக்டா அடுத்த நாள் காலை எங்கள் இருவரையும் காரில் பள்ளிக்கூடத்திற்கு அழைத்துப் போனான். முதலில் பள்ளிக்கூடத்தின் அதிபரைச் சந்தித்தோம். அவர் எங்களை அழைத்துக் கொண்டு போய் பள்ளிக்கூடத்தைச் சுற்றிக் காண்பித்து குகனின் வகுப்பு ஆசிரியரை அறிமுகம் செய்து வைத்தார். எங்களுக்கு அந்த பள்ளிக்கூடம் நனறாகப்  பிடித்துக் கொண்டது.

      “திங்கட்கிழமை சந்திப்போம்.” என விடை பெற்றோம்.

      பள்ளிக்கூடம் மதியம் மூன்று மணிக்கு முடிந்ததும் குகனை வீட்டுக்கு அழைத்துக் கொண்டு வந்து அவனுக்குச் சாப்பிட ஏதாவது கொடுத்து, பின் நான் வேலை முடிந்து வீடு திரும்பும் வரை குகனோடு கூட இருக்க ஒரு பெண்ணை தூதரகம் மூலம் ஒழுங்குபடுத்தியிருந்தேன். அந்தப் பெண்ணின் பெயர் அஞ்சலி. இந்தியப் பெண்ணோ என நினைத்தேன். ஆனால் வெள்ளிக்கிழமை எங்களை காண வந்தத ஒரு தாய்லாந்து பெண். இரண்டாயிர்ம் ஆண்டுகளுக்கு மேலாகத் தாய்லாந்துக்கும் இந்தியாவுக்கும் தொடர்பு உண்டு என்பது தெரிந்ததே. அதன் தாக்கம் தான் இது.   

      திங்கட்கிழமை காலையில் குகனைப் பள்ளிக்கூடத்தில் இறக்கி விட்டு, பின்பு தூதரகத்தில் போய் இறங்கினேன். தலைமை தூதுவர் கிரிஸ் கேர்டிஸ் என்னை வரவேற்று,

      “குட் மோர்னிங்! மதுபாஷினி. நீங்கள் தங்குமிடம், .உங்கள் மகனின் பள்ளிக்கூடமும் பிடித்திருக்கா?” என ஆங்கிலத்தில் கேட்டார்.

 “எல்லாம் பிடித்திருக்கு. நன்றி,“ என்றேன்.

      நாட்கள் சந்தோசமாக ஓடியது. தூதரகத்தில் வேலை செய்தவர்கள் சிலர் எனது சினேகிதர்கள் ஆனார்கள். சனி ஞாயிறுகளில் அவர்களோடு சயனிக்கும் புத்தர் கோவில், மரகத புத்தர் எனப் பல இடங்களைச் சுற்றிப் பார்த்தோம்.  

ஒரு நாள் எனது அபார்ட்மெண்ட் வாசற் கதவைத் திறக்கும் போது, பக்கத்து வாசலில் நின்ற பொலீஸ் சீருடை அணிந்த தாய் மனிதர் என்னிடம் வந்து,

      ”சுவட்டி கா! என கைகளைக் கூப்பி வணங்கிவிட்டு. “என் பெயர் அரூண், பொலீஸ் இலாகாவில் இருக்கிறேன். நீங்கள் தான் இந்த அபார்மெண்ட்டுக்கு புதிதாகக் குடிவந்திருப்பவரா? சந்தித்ததில் சந்தோசம்,” என்றான் ஆங்கிலத்தில்.

      நானும் ”ஓம், என் பெயர் மதுபாஷினி.  இங்கு அவுஸ்திரேலிய தூதரகத்தில் வேலை செய்யிறேன்,“ என்றேன்.

      ”ஏதேனும் உதவி வேணுமென்றால் தயங்காமல் கேளுங்கள்,” எனக் கூறி விடை பெற்றான். அதற்குப் பின் அரூணை மின்தூக்கியிலும், யூனிட் வாசலிலும் குகனுடன் பல தடவைச் சந்தித்தேன்.

வழக்கமாக அவுஸ்திரேலியாவில் வெள்ளிக் கிழமைகளில் கோவிலுக்குப் போவேன். இங்கு என் சக ஊழியரிடம் கேட்டதில், அருகாமையில் இருக்கும் மகா மாரியம்மன் சிறப்பு வாய்ந்த கோவில் என அறிந்தேன், அன்று வெள்ளிக்கிழமை வீடுதிரும்பியதும் குகனுடன் கோவிலுக்குப் புறப்பட்டேன். அபார்ட்மெண்ட் கதவைப் பூட்டிக்கொண்டு திரும்பவும், தன் வாசற் கதவைப் பூட்டியபடி திரும்பிய அரூண்,

      ”நான் மாரியம்மன் கோவிலுக்கு போறேன். நீங்களும் என்னுடன் வரலாமே,” எனக் கேட்டான். 

      “நீங்கள் இந்துவா?”

      ”ஓம் நான் பிறப்பாலே இந்து”

      ”நாங்களும் மாரியம்மன் கோயிலுக்குப் போகத் தான் கிளம்பிக் கொண்டிருக்கிறோம்,” என்றேன். அரூண் வெள்ளை உடை அணிந்து, அவன் சற்று மஞ்சளும் வெள்ளை நிற தோலுடன் மேவி வாரிய நேரான கருத்த  தலை முடியுடன் வாட்டசாட்டமாக எனக்கு தோற்றமளித்தான்.

      அரூணின் பி.எம்.டபிலியு (BMW) காரின் முன் சீட்டில் நானும் பின் சீட்டில் குகனும் ஏறிக்கொண்டோம்.

      கார் நகரவும் ”எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.” என்றேன்.

      ”ஏன்?”

”பொளத்த நாடான தாய்லாந்தில் வாழும் மக்கள் எல்லோரும் பெளத்தர்கள் என அனுமானித்து விட்டேன், மன்னியுங்கள்”

      ”நான் அடிக்கடி கோவிலுக்கு போவேன். பாங்கொக்கில், விஷ்னு கோவில், கணேஷா கோவில் இருக்கிறது. ஒரு நாளைக்கு அந்தக் கோவில்களுக்கு உங்ளை கூட்டிக் கொண்டு போறேன்,” என்றான்

 அரூணை அடிக்கடி சந்தித்தேன். அரூண் பாங்கொக்கின் பொலிஸ் இலகாவில் உயர் பதவியில் இருக்கிறான், அவனுக்கு இப்போது நாற்பத்தி இரண்டு வயது, அவன் மிகவும் நேசித்த மனைவி சரிதா ஒரு கார் விபத்தில் ஐந்து வருடத்திற்கு முன் இறந்து விட்டாள், அவளின் நினைவு இன்னும் அவன் மனதில் இருப்பது அவனுடன் பழகிய நாட்களில்  தெரிந்து கொண்டேன். நானும் என் பிறந்த மண்ணைப் பற்றியும், அவுஸ்திரேலியாவிற்கு புலம் பெயர்ந்தது, என் படிப்பு, திருமணம், விவாகரத்து எல்லாவற்றையும் மனம் திறந்து அரூணுக்குச் சொன்னேன். குகனுக்கும் அரூணை நன்றாகப் பிடித்திருந்தது. சனி ஞாயிறுகளில் அரூணுக்கு இலாகாவில் வேலை இல்லாவிட்டால் எங்கள் இருவரையும் பாங்கொக்கை சுற்றிப் பார்க்க கூட்டிக் கொண்டு போவான்.  நான் அப்பா அம்மாவோடு வாட்ஸ் அப்பில் கதைக்கும் போது, பக்கத்தில் அரூண் இருந்தால் அவர்கள் அரூணுடன் கதைப்பார்கள்.

      நாளடைவில் எங்கள் நட்பு மெல்ல காதலாக மாறிக் கொண்டு வந்தது. இங்கு ரகுவரனின் தொந்தரவு இல்லாமல், அரூணின் நட்பும் அவனது உறவுகளோடும் நண்பர்களோடும் பிளங்குவது எனக்கு இந்த பங்கொக் நகரம் சுவர்ணபூமியாக தோன்றியது.

      நாங்கள் பாங்கொக்கு வந்து ஒரு வருடம் ஆகியிருந்தது.  நான் நீதிமன்றம் விதித்த நிபந்தனையை நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்திலிருந்தேன்.

      ஆகையால் குகனின் பள்ளிக்கூட விடுமுறையுடன் நானும் மூன்று கிழமை லீவ் எடுத்துக் கொண்டு சிட்னி புறப்பட்டேன். அரூண் விமான நிலையம் வரை வந்து வழி அனுப்பி விட்டான்.

      அங்கு கோர்ட்டின் நிபந்தனைப் படி எனது மேற்பார்வையில், ஒரு நாலு ஐந்து நாட்கள் பகல் பொழுதில் மட்டும் ரகுவரனுடன் குகனை இருக்க விட்டேன்.

      மூன்று கிழமை முடியவும் குகனும் நானும் ஆவலோடு பாங்கொக் திரும்பினோம். மேலும் மூன்று மாதம் போயிற்று. ஒருநாள் வேலை முடிந்து என் அபார்ட்மெண்ட் வாசலை அணுகவும் திடீரென என் சுவர்ணபூமிக்குள் பூதம் நுழைந்தது போல் ரகுவரன் வந்து நின்றான்.

”என் மகனைப் பார்க்க வேணும்,” என்றவன், அபார்மெண்ட்டுக்குள் நுளையப் பார்த்தான். நான் கதவைத் திறக்கவில்லை.

      ”எனக்கு $20,000 ஆயிரம் டொலர் தா அல்லது நான் குகனை கொண்டு போய் விடுவேன்,” என மிரட்டினான்.

      ”இப்படி திடீரென வந்து கேட்டால் நான் எப்படிப் பணம் கொடுக்க முடியும்.. இரண்டு நாள் கழித்து வா,” எனச் சொல்லி அவனை அனுப்பிவிட்டேன்.

      அன்று இரவே அரூணின் அபார்ட்மெண்ட் கதவைத் தட்டி ரகுவரன் வந்ததையும் அவன் அச்சுறுத்தலையும் சொன்னேன்.

      உடனே அரூண், ”காலையில் நான் வேலைசெய்யும் அம்ருவக் சித்தானிக்கு (பொலீஸ் நிலையம்) உங்களை அழைத்துக் கொண்டு போறேன். அங்கே உங்கள் முன்னாள் கணவர் காசு கொடு அல்லது. பிள்ளையை தூக்கி கொண்டு போய் விடுவேன் என மிரட்டுகிறார் என்ற புகாரோடு அவன் போட்டோவையும் குடுங்கோ. நானே இந்த கேசை எடுத்து நடத்துவேன்,” என்றான் அரூண்.

      அடுத்த நாள் காலையில் குகனைப் பள்ளிக்கூடத்தில் இறக்கி விட்டு அரூணுடன் பொலீஸ் நிலையத்திற்குப் போய் ,அவர் சொன்னது போலப் புகாரைக் கொடுத்துவிட்டு, வேலைக்குப் போனேன்.

      அன்று மதியம் என் மொபைலுக்கு அஞ்சலியிடம் இருந்து அழைப்பு வந்தது. ”மம் குகனை பள்ளிக்கூடத்திலிருந்து கூட்டிக் கொண்டு வரப் போனால் அவனைக் காணவில்லை,” என்றாள் பதட்டத்துடன்.

      நான் ஏங்கிப் போனேன், உடனே பள்ளிக்கூட அதிபருடன் தொடர்பு கொண்டு விசயத்தைச் சொல்லி குகனைத் தேடும்படி கேட்டுக் கொண்டேன். என் மேல் அதிகாரியிடமும் விசயத்தைச் சொல்லிவிட்டு, பள்ளிக்கூடத்தில் போய் இறங்கினேன். என்னைக் கண்டதும் பள்ளிக்கூட அதிபரும் குகனின் ஆசிரியரும் ஓடிவந்து, ”குகன் கடைசி பாட நேரத்தில் ரொய்லட்டுக்கு போனவன், திரும்பி வரவில்லை”, என்று, சொன்னார்கள்.

      மிரட்டியபடி ரகுவரன் தான் குகனைக் கடத்திக் கொண்டு போயிருக்க வேணும் என முடிவெடுத்து, உடனேயே அரூணை அவர்  மொபைலில் அழைத்து விசயத்தை சொன்னேன்.

      ”மது! கவலைப்பட வேண்டாம் அந்தக் கயவனைப் பிடித்து விடலாம். குகனைப் பத்திரமாக உன்னிடம் கொண்டு வந்து சேர்ப்பது என் பொறுப்பு. நீங்கள் வீட்டுக்குப் போங்கோ எங்கள் தாய்லாந்து டம்ருவட் (பொலிஸ்) அவனை தப்ப விடமாட்டுது.,” என்றான் குரலில் கண்டிப்புடன். 

      தொடர்ந்து, ”ரகுவரன் எந்த ஹோட்டலில் தங்கியிருக்கிறான் என குடிவரவு இலகா மூலம் அறிந்து வைத்திருக்கிறோம் ஆகையால்   இன்னும் ஒரு இரண்டு மணித்தியாலத்திற்குள் குகனை மீட்டு, பத்திரமாக உங்களிடம் கொண்டு வந்து சேர்ப்போம்!.” அவணது வார்த்தைகள் எனக்கு தைரியத்தையும் ஆறுதலையும் கொடுத்தது. அபர்மெண்ட்டுக்கு போய் வாசலைப் பார்த்தபடி காத்திருந்தேன்.

      சொன்னபடி இரண்டு மணித்தியாலத்திற்குள் அரூணே போலீஸ் காரில் சைரன் ஒலிக்க குகனைப் பத்திரமாக என்னிடம் கொண்டு வந்து சேர்த்தார். அழுதபடி வந்த என் மகனை சந்தோசத்தோடு கண்ணீர் வடிய மார்போடு அணைத்து கன்னத்தில் முத்தமிட்டேன். பக்கத்தில் நின்ற அரூணுக்கு நன்றி சொன்னதோடு அவரையும் அணைத்துக் கொண்டேன்.   

ரகுவரனுக்குக் குகனை தன்னுடன் வைத்திருக்க உரிமை இல்லாத பட்சத்தில், குகனைக் கடத்தி, அவுஸ்திரேலிய நீதிமன்றம் நிபந்தனையை மீறிய குற்றத்திற்காக தாய்லாந்து காவல் துறை அவனைக் கைது செய்தது. அவுஸ்திரேலிய கோர்ட்டின் தீர்ப்பை மீறியதால் ரகுவரனை அந்த நாட்டின் நீதிமன்றத்தில் தான் விசாரிக்க வேண்டும் என்பதால், சிட்னி காவல்துறையிடம் ஒப்படைத்தார்கள்.

      அங்கு வழக்கறிந்தர் என் சார்பாக வாதாடி இனிமேல் ரகுவரனுக்கு தன் மகனைப் பார்க்கவோ அல்லது ஒரு பொழுதேனும் சேர்ந்து இருக்க முடியாது எனத் தீர்ப்பு வழங்கப்பட்டது. மேலும் நீதிமன்ற உத்தரவை    மீறியதோடு குகனைக் கடத்திய குற்றத்திற்காகவும் ரகுவரனுக்கு நான்கு வருடம் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.

      குகனும் நானும் எங்களைக் காத்த வீரன் அரூணும் அவன் வாழும்  சுவர்ணபூமியுயே எங்களது வாழுமிடமும் உலகமும் என முடிவெடுத்தோம்.   .     

XXXXXXX

My short story published in the Kanayazhi Magazine

KANAIYALLI – April 2023 THEVAKI KARUNAGARAN

”அதற்காக ஏன் தன்னை கட்டப்போற பெண்ணை இப்படி கர்ப்பப்பை குழாயை கட்டிப்போட்டுத்தான் கல்யாண மேடைக்கு வரவேணுமெண்டு ஒரே பிடியாக இருக்கிறார்? கல்யாணம் கட்டுறது பிள்ளை குட்டிகள் பிறந்து வம்சம் பெருகிறதுக்கு தானே?”

”புதுசா வாற பெண்டாட்டிக்குப் பிள்ளை பிறந்தால், மூத்த தாரத்து பிள்ளையை நல்லா பார்த்துக் கொள்ள மாட்டாள், ஓர வஞ்சனையாக இருந்துவிடுவாளோ என்ற பயம்தான்,” என தனக்குத் தெரிந்த உண்மை எல்லாவற்றையும் கொட்டினார் மகாலிங்கம்.

”அதற்காக இப்படி ஒரு நியாயமற்ற நிபந்தனையைப் போடலாமா?” எங்கள் மகளும் படித்து நல்ல வேலையிலே இருக்கிறாள். என்ன அவள் நிறமாகயில்லை, அதைவிட அவளுக்கு என்ன குறை?” இந்த அநியாயத்தை தாங்கமுடியாமல் கேட்டாள் மகாலஷ்மி.

 தந்தையும் தாயும் பேசியதைப் பக்கத்து அறையிலிருந்து கேட்டுக் கொண்டிருந்தாள் சித்ரா. ஒரு வாரமாக இந்த சிட்னி மாப்பிள்ளை பற்றிய கதை தான் வீட்டில். சித்ராவுக்கும் எல்லா விவரமும் பெற்றோர் சொல்லியிருந்தார்கள். அறையிலிருந்த நிலைக் கண்ணாடி முன் போய் நின்று சித்ரா தன் உருவத்தை நுணுக்கமாகவே ஆராய்ந்தாள். முகத்தில் கண், மூக்கு, உதடுகள் அந்தந்த இடத்திலிருந்தன. ஆனால் அந்த முக

அம்சங்களில் ஒரு கவர்ச்சியுமில்லை வெறும் சாதாரண முகமாகவே அவளுக்கு பிரதிபலித்தது. முப்பத்திரண்டு வயதைத் தாண்டிய தன் உடம்பை இடம், வலம் எனத் திருப்பித் திருப்பி நிலைக் கண்ணாடியில் பார்த்தாள். ஒரு இளம் வயது கல்யாண யுவதியின் உடல் கட்டுக்கும் அவள் உடல் கட்டுக்கும் எவ்வளவு வித்தியாசம். இடையிலும் நாரியிலும் தாராளமாகச் சதைப் போட்டு, இரண்டு பிள்ளை பெற்ற உடம்புப் போல அவளுக்கு தெரிந்தது.

’அப்பாவும் அம்மாவும் தங்களுடைய ஒரே மகளைக் கட்டிக் கொடுத்து பேரப்பிள்ளைகளைப் பார்க்க ஆசைப் படுகிறார்கள். `எங்கட மகள் வயதை ஒத்த சினேகிதிகள் எல்லோரும் கல்யாணம் கட்டி கணவர் குழந்தைகள் என வாழ்கிறார்கள், எங்கட மகள் மட்டும் தனி மரமாக நிற்கிறாள். நாளைக்கு, நாங்களும் போய்விட்டாள் அவளுடைய கதி என்ன?` என அம்மா அப்பாவிடம் சொல்லி அழுவதை பல தடவை கேட்டிருக்கிறேன். இப்படி நினைத்துக் கொண்டிருக்க முன் தாழ்வராத்திலிருந்த தாயும் தந்தையும் சிட்னி மாப்பிள்ளையைப் பற்றித் திரும்பவும் பேசத் தொடங்கவும் கவனமாக கேட்டாள்.         

”இந்த மாப்பிள்ளையின்ட சாதகமும் எங்கட சித்ராவின் ஏழுச் செய்வாய்  சாதகத்தோடு நல்லா பொருந்துது.  தவிர மாப்பிள்ளைன்ட பெற்றோர் இங்கேதான் இருக்கிறார்கள், அதனாலே அங்கே மாமா மாமி என்று எந்த பிச்சல் பிடுங்கலும் இருக்காது” என மகாலிஙம் தன் கருத்தைச் சொன்னார்

”கல்யாணத்திற்கு முன் கர்ப்பப்பைக்குப் போகிற குழாயை கட்டிப்போட்டுத்தான் பெண் மணவறைக்கு வரவேணும் என்று சொல்லுவது, பிச்சல் பிடுங்கல் இல்லையா?  இதனாலே அவளுக்கென்று ஒரு பிள்ளையும் எங்களுக்கும் ஒரு பேரப்பிள்ளை ஒன்றுமே கிடையாமல் போயிடும்,” எனச் சேலைத் தலைப்பை உதறி இடுப்பில் செருகியபடி உள்ளே செல்ல எழுந்தாள் மகாலஷ்மி.

”கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்றால் எப்படி? இப்படி எல்லாம் பார்த்தா  எங்கள் மகள் சித்ராவுக்குக் கல்யாணமே நடக்காது. அவள் கன்னியாகத் தனித்து வாழவேண்டியது தான்.” என்றார் மகாலிங்கம்.  

   மகாலிங்கம் சொல்லி முடிக்கவும் அவரது கைபேசி `அன்பே சிவம்` என ஒலித்தது. மறு முனையில் தரகர் சங்கரன் தான் பேசினார்.

”ஐயா நாளைக்குப் புதன் கிழமை நல்ல நாளாம். உங்களையும் சந்தித்து பெண்ணையும் பார்த்து மற்ற விசயங்களையும் பேசலாமா என்று மாப்பிள்ளை கேட்கிறார். அவருக்கு லீவு இன்னும் இருபது நாளில் முடிந்துவிடும். சிட்னி போகவேணும். அதற்கிடையில் ஆகவேண்டியதை செய்து கல்யாணத்தையும் வைக்கவேணும் தானே?” என்றார் தரகர்.

”ஒருக்கா என்ட……….மகளின்ட மு……….டிவை கேட்டு………விட்டுச் சொல்லுறேன்~ என இழுத்தார் மகாலிங்கம்.

”ஓம் ஓம் மகளின்ட முடிவு முக்கியம். ஆனால் நாளைக்குப் பின்னேரம் ஐந்து மணிக்குள்ளே முடிவை சொல்லிவிடுங்கோ.  இன்னுமொரு பகுதிக்கும் இந்த மாப்பிள்ளையை பிடித்திருக்கு. சும்மாவா சிட்னி மாப்பிள்ளை அல்லவா?” என்றார் தரகர்.

  கைபேசியில் தகப்பன் தரகருக்குச் சொன்ன பதிலை பக்கத்து அறையிலிருந்த சித்ராவுக்கும் கேட்டது.

`அடுத்து அப்பா என்னிடம் வந்து உன் முடிவு என்னம்மா என கேட்கப்போறாரே? எத்தனை கல்யாண தரகர்கள், எத்தனை மாப்பிள்ளைகள் என்னைப் பார்க்க வந்திருக்கிறார்கள்? பெண் சுமாராகவும், நிறமாகவுமில்லை எனவும் சீதனத்தை ஒரு ஐந்து லட்சம் கூட்டிக் குடுத்தால் மாப்பிள்ளை வீட்டாருக்கு சம்மதமாம் என்றும் தரகரிடமிருந்து அடுத்த நாள் பதில் வரும். ஏன்? கல்யாண திகதியும் முடிவான பின் சீதனம் கூட்டிக்கேட்டு என் கல்யாணம் நின்று போகவில்லையா? எந்த சீதனுமும் வேண்டாம் படித்திருந்தால் போதும். என் மகனுக்கு தாயாகவிருந்து பாசத்தோடு பார்த்துக் கொண்டால் போதும் என இந்த வெளியூர் மாப்பிள்ளை கேட்கிறார். எனக்கும் வயது ஏறிக்கொண்டு போகுது. பேசாமல் இவரையே கட்டிக் கொண்டு சிட்னி போய் வாழலாம். அப்பா அம்மாவுக்கு திருப்தியாக இருக்கும்.’ என தன் மனதுக்குள்ளே முடிவெடுத்து கொண்டாள்

  ”அம்மா! சித்ரா இங்கே வாம்மா?” எனத் தந்தை அழைக்கவும், சித்ரா பதட்டப்படாமல் அவர் அமர்ந்திருந்த முன் தாழ்வாரத்திற்குப் போனாள்.

“சிட்னியிலிருந்து வந்திருக்கும் மாப்பிள்ளை மாதவனுக்கு நாளை ஐந்து மணிக்கு முன் எங்கள் முடிவை சொல்லவேணும் என்று தரகர் சொல்லுகிறார்.  உனக்கு மாப்பிள்ளை போட்டிருக்கும் நிபந்தனைகள் சொல்லியிருக்கிறோம் தானே. அவனோடு வாழப் போறது நீ, ஆகையால் அவரை கட்ட உனக்கு விருப்பமா இல்லையா? நீயே முடிவெடு. நாங்கள் உன்னைக் கட்டாயப் படுத்தமாட்டோம்,” என்றார் மகாலிங்கத்தார். ஏற்கனவே சித்ரா தன் மனதில் முடிவெடுத்திருந்தபடியால்,

 ”அப்பா எனக்கு சிட்னி மாப்பிள்ளையைக் கட்ட சம்மதம்,”  எனப் பட்டென்று பதிலளித்தாள்.

திகைப்பில் ஒரு கனம் வாயைத் திறந்தபடியிருந்த மகாலஷ்மி, ”ஏண்டி! இவரைக் கட்டினால் உனக்கென்று ஒரு பிள்ளை பிறக்காதே,” என்றாள் கீச்சிட்ட குரலில்.

”முப்பத்திரெண்டு வயதைத் தாண்டிய எனக்கு இனி பிள்ளை பிறக்கும் என்று என்ன உத்தரவாதம். ஒரு பிள்ளைக்குத் தாயாக இருக்கிற வாய்ப்பு கிடைக்குதே, அதுவே போதும்.” முகத்திலோ குரலிலோ எந்த உணர்ச்சியுமின்றி சாதாரணமாக பதிலளித்தாள் சித்ரா.

 இருதய நோயாளியான மகாலிங்கத்துக்கு மனதிலிருந்த வேதனையோடு சித்ராவின் பதிலால் இருதயம் வலித்தது, அந்த வலி நெஞ்சிலே பரவத்தொடங்கியது. சட்டென்று சேர்ட் பொக்கட்டிலிருந்த சிறு மருந்து புட்டியை எடுத்து நாக்கிற்கு கீழ் தெளித்து விட்டுச் சாய்ந்து அமர்ந்து கொண்டார். நெஞ்சு வலி முற்றாய் போனபின் ஒரு இரண்டு மணித்தியாலம் கழித்து தரகரைக் கைபேசியில் அழைத்து, “எங்கள் எல்லோருக்கும் சம்மதம், மாப்பிள்ளையிடம் நாளைக்கே வந்து எல்லா விசயங்களையும் பேசி முடிவெடுக்கலாம் என சொல்லிவிடுங்கோ,” என்றார்.

அடுத்த நாள் காலை பத்து மணிக்கு மேல் நல்ல நேரம் ஆகையால் மாதவன் தன் பெற்றோருடனும் தன் மூன்று வயதுக் குழந்தை றோசானுடனும் கூடவே தரகரும் வெள்ளவத்தையின் ஃபசல்ஸ் லேனில் இருந்த மகாலிங்கத்தின் வீட்டுக்கு வந்தார்கள். அவர்களை மகாலிங்கமும் அவர் மனைவியும் வாசலுக்கு வந்து வரவேற்றார்கள். உள்ளே வந்தவர்கள் அந்தச் சிறு வரவேற்பறையில் நெருக்கமாக அமர்ந்து கொண்டனர். 

 மாப்பிள்ளையின் பெற்றோர், மகாலிங்கத்திடம் எப்படியிருக்கிறீர்கள் எனச் சுகம் விசாரித்தபின் வாயே திறக்கவில்லை. 

 குழந்தை றோசானை தன் மடியில் இருத்திக் கொண்டு அமர்ந்திருந்த மாதவன், ”அங்கில்! அன்டி! தரகர் எல்லா விவரமும் சொல்லியிருப்பார் தானே,” எனக் கல்யாணப் பேச்சைத் தொடக்கினான்.

“ஓம் ஓம், மகளுக்கும் எல்லாம் தெரியும்.”

”அது நல்லம்……என்றாலும் அவவுக்கு முன்னாலே எல்லாத்தையும் கதைத்து முடிவெடுக்கிறது முக்கியம் தானே,”

”அம்மா சித்ரா, சித்ரா! மாப்பிள்ளை உன்னையும் வைத்து கொண்டுதான் கல்யாண விசயங்கள் கதைக்க விரும்புகிறார். இங்கே வாம்மா?” என அழைத்தார்.

இளம் சிவப்பு நிறத்தில் ஒரு பட்டுப் புடவையும் அதற்கு ஒத்துப் போகிற அதே நிறத்தில் கோடிட்ட ரவிக்கையும் அணிந்து, எப்போதும் போல் தனது அலை அலையான கூந்தலை வாரி இளைத்த ஒற்றைப் பின்னல் மார்பில் தவழ மெல்ல நடந்து வந்து எல்லோருக்கும் கோப்பி கொடுத்துவிட்டு காலியாக இருந்த கதிரையில் அமர்ந்து கொண்டாள், சித்திரா. மாதவன் சித்ராவின் தோற்றத்தை கவனித்ததாகத் தெரியவில்லை. ஆனால் தன் மகனிடம், அவளைச் சுட்டிக்காட்டி

 ”அங்கே பார் உனக்கு அந்த ஆன்டியைப் பிடித்திருக்கா? என மகனிடம் கேட்க அவனும் ’ஓம்’ எனத் தலையை ஆட்டினான்.

“அப்ப நீ கொண்டு வந்த சொக்கலட்டை ஆன்டிக்கு குடுக்கிறியா?” எனக் கேட்டார். குழந்தை மாதவனின் மடியை விட்டு இறங்கி, சித்ராவை அணுகி சொக்கலட் பெட்டியைக் கொடுத்தான். பெட்டியை வாங்காமல் சித்ரா குழந்தையைத் தூக்கி தன் மடியில் வைத்துக் கொண்டு

 ”உன் பெயர் என்ன?”எனக் கேட்டாள்.

 ”றோசான்”

”உனக்கு சொக்கலட் பிடிக்குமா?“

“ஓம், இது உங்களுக்காக அப்பாவும் நானும் சிட்னியிலிருந்து வாங்கிக் கொண்டு வந்தனாங்கள்,” என்றான். 

”அப்படியா?” என்றவள் சொக்கலட் பெட்டியை திறந்து ஒரு சொக்கலட்டை எடுத்து றோசானின் வாயில் வைத்துவிட்டாள்.

”குழந்தை உங்கள் மகளோடு ஒட்டிக் கொண்டான். பிறகு என்ன? மிகுதியை பேசி முடிக்கவேண்டியது தான்,” என்றார் தரகர்.

”ஓம் பேசலாமே. எங்கள் சித்ரா பள்ளிப் படிப்பு முடிந்ததும், ஒரு வருடம் கொழும்பு திறந்த பல்கலைக்கழகத்தில் படித்து முன் பள்ளி கற்பித்தல் மேம்பட்ட சான்றிதழ் பெற்று, இப்போது கொழும்பிலே புனித பிரிஜெட்ஸ் கல்லுரியில் முன்பள்ளி ஆசிரியராக வேலை பார்த்துக் கொண்டிருக்கிறாள். அவளுக்கு பிள்ளைகளென்றால் கொள்ளைப் பாசம்.” என்றார்,” மகாலிங்கம்.

”அப்படியா?” என்ற மாதவன் எல்லோர் முன்னாலும், ”சித்ரா! நான் கேட்டிருக்கும் சிறிய ஒபரேசனின் பின் விளைவுகள் தாக்கங்கள் பற்றி சரியாகப் புரிந்து கொண்டு, என்னைக் கல்யாணம் கட்ட சம்மதமா எனச் சொல்லுங்கோ?” என நேரடியாகவே கேட்டான். 

சித்ராவும், ”எல்லாத்தையும் தெரிந்து, யோசித்து தான் நான்  சம்மதிக்கிறேன்,” என பதிலளித்தாள்.

“எனக்கு சித்ராவை நல்லா பிடித்திருக்கு. என் மகனுக்கு நல்ல தாயாக இருப்பாள் என நம்புகிறேன். எனக்குச் சீதனமா பணமோ வீடோ வேண்டாம். உங்கள் மகளை மட்டும் எனக்குக் கட்டித்தந்தால் போதும். ஸ்பெசல் லைசன்ஸ் எடுத்து கல்யாணத்தைக் கச்சேரியில் பதிவு செய்திடலாம். மற்ற விசயத்தைப் பற்றி நான் டொக்டருடன் எல்லா ஒழுங்கும் செய்திருக்கிறேன். இன்னும் இரண்டு நாளில் அந்த ஒபரேசனை செய்திடலாம்”, என்றான் மாதவன். மகாலஷ்மிக்கோ அவன் ஒரு வியாபார ஒப்பந்தம் பேசும் தோரனையில் பேசுவதாக பட்டது.

“எல்லோருக்கும் சந்தோசம் தானே? இன்னும் இரண்டு வாரத்திலே 14ஆம் திகதி  திங்கட்கிழமை காலை பத்து மணிக்கு நல்ல முகூர்த்தம் அண்டைக்குக்  கலியாணத்தை வைத்திடலாம். என்ன சொல்லுகிறீர்கள்?” என்ற தரகர், தனக்குக் கிடைக்கப் போகின்ற கனமான தரகை நினைத்து வாயெல்லாம் பல்லாக இளித்தார்.

மாதவனும் அவன் பெற்றோரும் தங்கள் சம்மதத்தைத் தெரிவித்தனர். சித்ராவின் பக்கத்திலிருந்து தந்தை மகாலிங்கம் சம்மதம் தெரிவித்தார்.

மகாலஷ்மியோ `மாப்பிள்ளைக்கு எது நடக்காவிட்டாலும் பரவாயில்லை அந்தக் கர்ப்பத்தடை மட்டும் நடந்திட வேணுமெண்ட முடிவோடு தானிருக்கிறார். இதோடு எங்கள் பரவணியே இல்லாமல் போயிடுமே, இது என்ட மனுசனுக்கு புரியுதில்லையே’ என மனதுக்குள் புழுங்கினாள்.

மகாலிங்கம் தனது தகுதிக்கு ஏற்ப செலவு செய்து மகளின் கல்யாணத்தை நடத்தினார். மாதவனும் இது இரண்டாவது கல்யாணம் என்றபடியால் பணமிருந்தும்  அமர்க்களப் படுத்தாமல் கல்யாணத்தை எளிமையாக நடத்துவதையே விரும்பினான்.

கல்யாணம் நடந்து மூன்றாம் நாளே மாதவன் தன் மகனோடு சிட்னி போய்விட்டான். இரண்டு மாதத்தில் சித்ராவுக்கு மாதவனின் மனைவி என்ற அடிப்படையில் அவுஸ்திரேலியா வீசா கிடைத்தது. மாதவன் அனுப்பிய சிங்கப்பூர் விமான டிக்கட்டில் ஆர்வத்தோடும் ஒரு வித கிளர்ச்சியோடும் சிட்னியில் போய் இறங்கினாள்.  சித்ராவை ஆவலோடு அன்போடும் மாதவன், குழந்தை றோசான் மற்றும் மாதவனின் நண்பர்களும், அவர்களது குடும்பங்களும் வரவேற்றனர்.

வெள்ளவத்தை ஃபசசெல்ஸ் லேனில் இரண்டு அறை வீட்டில் நினைவு தெரிந்த நாள் முதல் குடியிருந்த சித்ரா, கணவர் மாதவனின் இரண்டு அடுக்கு வீட்டைப் பார்த்து வியந்தாள். வீட்டுக்குள் போனதும் வரவேற்பறை, அதை ஒட்டினாற் போலச் சாப்பிடும் அறை அதற்கு பின்னால் குடும்ப அறை. படிக்கட்டில் ஏறிப் போகவும் மேல் மாடியில் நான்கு படுக்கை அறைகள் என விசாலமான வீடாகவிருந்தது.

சித்ரா படிக்கட்டில் ஏறிப்போன போது சுவரில் மாதவனினதும் அவர் முதல் மனைவி ரேவதியினினதும் கல்யாணப் போட்டோவும் அதற்கு அடுத்தாற்போல, மாலை அணிந்திருந்த ரேவதியின் போட்டோ தொங்குவதையும் கவனித்தாள். ரேவதி நல்ல நிறமாகவும் சினிமா நடிகை போல் அழகாகவுமிருந்தாள். ’இவ்வளவு அழகான மனைவியை அவர் ஆழமாகக் காதலித்திருப்பார் போலும். எனினும் அவள் இழப்பிற்குப் பின் தன் மகனுக்கு ஒரு தாய் வேணுமென்பதற்காக என்னைக் கல்யாணம் செய்திருக்கிறார்,’ என்பதையும் உணர்ந்தாள். 

சிட்னி வாழ்க்கையும் சிட்னி குளிரும் எல்லாமே சித்ராவுக்குப் புதிதாகவிருந்தது. மாதவன் பொறுமையாக சிட்னி வாழ்க்கையைக் கொஞ்சம் கொஞ்சமாக அவளுக்கு அறிமுகப்படுத்தி சித்ராவை அன்போடு அவளது விருப்பு வெறுப்புகளை மதித்து நடந்து கொண்டான். அவளுக்குக் கல்யாண சுகத்தையும் கொடுத்து தானும் அந்த சுகத்தை அனுபவித்தான். சித்ராவுக்கும் மாதவன் மேல் அன்பும் பாசமும் வளர்ந்தது. றோசானை தன் சொந்த மகனாகவே பாசத்தோடு பார்த்துக் கொண்டாள். குழந்தை றோசானும் அம்மா என்ற உணர்வோடு அவளோடு ஒட்டிக் கொண்டான்.

இப்படியே இரண்டு வருடங்கள் உருண்டோடின. குழந்தை றோசான் முதலாம் வகுப்பு பள்ளிக்குப் போகத் தொடங்கியபின்,

”சித்ரா, விருப்பமென்றால் நீ உனக்குப் பிடித்த வேலை ஒன்றைத் தேடிக் கொள்,” என மாதவன் சொன்னான். சித்ராவும் தனது முன்பள்ளி கற்பித்தல் சான்றிதழையும் பத்து வருடமாகப் படிப்பித்த அனுபவத்தையும் காட்டி ஒரு பள்ளிக்கூடத்தில் முன்பள்ளி ஆசிரியர் ஆனாள்.

மாதவன், சித்ரா, றோசான் குடும்ப வாழ்க்கை மிகவும் சந்தோசமாக ஓடிக் கொண்டிருந்தது. அவர்கள் மகன் றோசானுக்கு பதினேழு வயது முடிந்திருந்தது. சமீபத்திலே றோசான் தனது கைகளிலும் கால்களிலும் உணர்வு இல்லாத போலவும் உடம்பும் ஒரே சோர்வாகவும் இருக்கிறது எனப் பெற்றோரிடம் சொன்னான். அவர்கள் ஃப்லு காய்ச்சல் என நினைத்து பனடோல் மாத்திரை கொடுத்தார்கள். ஒரு மாதம் கழித்து, தன் பார்வையும் மங்கலாக தெரிகிறது என்றான்.  உடனே மாதவனும் சித்ராவும் தங்கள் குடும்ப வைத்தியரிடம் றோசானைக் கூட்டிக் கொண்டு போய் காட்டினார்கள். றோசானைச் சோதித்த வைத்தியர் அவனை நரம்பியல்

நிபுணரிடம் அனுப்பிவைத்தார். நரம்பியல் நிபுணர் பல சோதனைகள் செய்துவிட்டு இரண்டு நாள் கழித்து நிபுணர் மாதவனையும் சித்ராவையும் வரவழைத்து,

“உங்கள் மகனுக்கு எம் எஸ் அதாவது மல்டிபில் ஸ்களீரோசிஸ் என்கிற நரம்பியல் நோயாக இருக்கலாம். இந்த வியாதிலே இரண்டு வகை இருக்கிறது இது தீங்கற்றது போல் தெரிகிறது. உங்கள் குடும்பத்தில் உங்கள் தாத்தா பாட்டி சகோதர்கள் யாருக்காவது இந்த வியாதி வந்திருக்கா?”

”இப்படி இந்த வியாதியாலே எனது குடும்பத்திலே எவராவது பாதிக்கப்பட்டதாக கேள்விப் படவில்லை.” என்றான் மாதவன்.

”உங்கள் மனைவி?” என அருகில் நின்ற சித்ராவைப் பார்த்தார் டொக்டர் 

”றோசான் என் முதல் தாரமான ரேவதியின் மகன். றோசானின் அம்மா இறந்து பதிநாலு வருசமாகிறது.”

”முதல் மனைவியின் உடன் பிறந்தோர் யாராவது இருந்தால் அவர்களுடைய டி. என். ஏ (மரபணு) உங்கள் டி. என் ஏ யும் வைத்து இது தீங்கற்ற எம் எஸ்ஸா அல்லது வேறு வியாதியா என அறிந்திடலாம்.” என்றார் நிபுணர்.

மாதவனும் சித்ராவும் றோசானுக்கு என்ன வருத்தமோ? பெரிய வருத்தமாக இருக்கக்கூடாது என கவலைப்பட்டு ஒருத்தருக்கு ஒருத்தர் ஆறுதல் சொன்னார்கள்.

ஒரு வாரம் கழித்து டி. என் ஏ பரிசோதனை முடிவுகள் வந்ததும் நரம்பியல் நிபுணரைச் சந்திக்கும்படி அழைப்பு வர மாதவன் மட்டும் போனான்.

“மாதவன் இந்த வியாதி உங்கள் இறந்துபோன மனைவி ரேவதியின் பரம்பரையிலிருந்து தான் றோசானுக்கு வந்திருக்கிறது. இது நிச்சயமாகத் தீங்கற்ற அதாவது பினைன் மல்டிபில் ஸ்களீரோசிஸ் (Benign Multiple Scoloris) மிகவும் சாதுவானது என்பது உங்களுக்கு ஒரு ஆறுதலாக இருக்கும். ஒழுங்கா மருந்துகள் எடுத்தால் அவனால் சாதாரண வாழ்க்கை வாழலாம்” என்றார் நிபுணர்

”தாங்க் கோர்ட், சந்தோசம் டொக்டர். உங்கள் ஆலோசனைப்படி நடக்கிறோம்,” என்றான் மாதவன்.

தொடர்ந்து நிபுணர், ”மாதவன்…..இந்தச் சோதனைகளால் இன்னுமொரு விசயமும் தெரிய வந்திருக்கு, உங்களுக்கு அதிர்ச்சியாகவிருக்கும். உங்கள் மகன் றோசானின் டி என் ஏ உங்கள் டி.என்.ஏ உடன் ஒத்து போகவேயில்லை. அதாவது றோசான் உங்கள் மகனில்லை.”

”டொக்டர் விளயாடுகிறீர்களா?” எனக் கேட்டபடி மாதவன் எழுந்து நின்றுவிட்டான்

“மாதவன் எனக்கும் இது அதிர்ச்சியாகவிருந்தது, ஆகையால் இரண்டாம் முறை சோதனையைச் செய்வித்தேன். ஆயினும், மன்னிக்க வேணும் மாதவன், றோசான் உங்கள் மகனேயில்லை. இது தான் உண்மை.

இதைக் கேட்டதும் மாதவன் கதிகலங்கிப் போனான்.

‘ரேவதியும் நானும் ஒருவரை ஒருவர் காதலித்துத்தானே சிட்னியில் கல்யாணம் கட்டினோம். கல்யாணமாகி சரியாக ஒன்பது மாதத்தில் தானே றோசான் பிறந்தான். அப்போ! ரேவதி என்னை கல்யாணம் கட்டும்…….போது கர்…ப்பமாக இருந்தாளோ? எனக்கு….எ…..ன…க்கு என் ரத்தமும் சதையுமான ஒரு பிள்ளையில்லயா?’  ”ஐயோ!” எனத் தலையில் கையை வைத்துக் கொண்டு, அங்கேயே அமர்ந்து விட்டான்.

அவளா இவள்?

அன்று சனிக்கிழமை, வாசல் கதவு மணி அடித்தது. கணவர் முரளியும் வீட்டில் இல்லை. மீனா ஆவலோடு ஓடிப்போய் கதவதைத் திறந்தாள். அவளுடைய சினேகிதி ரேணுவைக் கண்டதும் சந்தோசத்துடன், வா,வா எனக் கையைப்பிடித்து உள்ளே அழைத்துக் கொண்டு வந்தாள்.”உன்னைக் கன நாளாக் காணயில்லை. ஒருக்கா எப்படி இருக்கிறாய் எண்டு பாத்திட்டுப் போவம் எண்டு கிளம்பி வந்தனான்.” என்றபடி கதிரையில் அமர்ந்தவள் மீனாவின் அழகான மாநிற முகம் வாடியிருப்பதைக் கவனித்துவிட்டு,

“மீனா ஏன் சோர்ந்து போயிருக்கிறாய். உன்னுடைய பிரச்சனைதான் என்ன?”

”எல்லாத்தையும் சொல்லுறேன். முதல்லே இரண்டு பேருக்கும் டீ போட்டுக் கொண்டு வாறன்” என்றவள் உள்ளே போய் இரண்டு கப்பில் கிறீன் டீ போட்டுக் கொண்டு வந்து ரேணுவுக்குக் கொடுத்துவிட்டு தானும் டீயை குடித்தபடி,

”ரேணு எனக்கு மட்டும் ஏன் இப்படிப்பட்ட வாழ்க்கை. இங்கு சிட்னிக்குப் புலம் பெயர்ந்தபின் கஸ்டப்பட்டு ஆங்கிலம் படித்து விட்டு பிறகு லாப் அசிஸ்டன்டுக்குப் படித்து வேலையானேன். அம்மாவும், புரோக்கர்மார் பின்னாலே அலைந்து திரிந்து எனக்கு இந்தக் கல்யாணத்தைச் செய்து வைத்தா. நானும் நல்ல வாழ்க்கை அமைந்து விட்டது என மகிழ்ந்தேன். மூன்று வருசம் முரளியும் நானும் சந்தோசமாகத் தான் வாழ்ந்தோம். கடந்த இரண்டு வருசமா அவர் குடித்துப்போட்டு வீட்டை வந்து கத்துறதும் என்னை அடிக்கிறதும் வழக்கமாயிட்டுது, நான் இரவில் அழுது அழுது நித்திரை இல்லாமல், கிடந்துவிட்டு காலையிலே உடல் அலுப்போடு வேலைக்கு போறேன். இப்ப என்னடா என்றால் நான் மலடியாம், என்னோடு வாழமுடியாதாம். விவாகரத்து கேட்கிறார். நான் என்ன செய்வேன் ரேணு!!” என மேசைமேல் தலையைக் கவிழ்த்துக் கொண்டு விம்மி விம்மி அழுதாள்.

ரேணு அவள் தலையைத் தடவியபடி,” அழாதே, என்ன செய்வதுவிதி எங்கள் வாழ்க்கையைப் புரட்டி போடுது.  மீனா! முரளி ஒரு சீனப் பெண்ணோடு திரிகிறான் எண்டு சொன்னியே. அதைப் பற்றி …………?”

”ஓம் ஓம், அந்த சீனப்பெட்டையோட சனி ஞாயிறு தங்கிவிட்டு வாறார். சீனத்தி பிரெக்னன்டாம். என்னை விவாகரத்து செய்திட்டு அவளை கட்டப் போறாராம்.”

”அப்படியோ ? வேறு ஒருத்தியிட்டே போறவனோடு என்ன வாழ்க்கை! விவாகரத்தை குடுத்திட்டு. நீ நிம்மதியா இருக்கலாம்.”

”ஐயோ நான் டிவோசியா போவேன். இங்கே இருக்கிற எங்கள் சனம்  எப்படியெல்லாம் முதுகுக்குப் பின்னாலே கதைப்பார்கள்.”

                ‘நீ என்ன அந்தச் சனங்களுக்காகவா வாழுறாய். முரளி உன்னோடு தாம்பத்திய வாழ்க்கை வாழுறானா? இல்லையே. அவனில்லாவிட்டால் என்ன? உனக்கு உத்தியோகம் இருக்கு. அவனை நம்பி நீ வாழத் தேவையில்லை. நானும் தான் உள் நாட்டுப் போர் மூட்டம் அப்பாவை இழந்திட்டு அம்மா தம்பிமாரோடு சிட்னிக்கு வந்து சேர்ந்தேன். நான் வேலை செய்து தம்பிமாரைப் படிப்பித்து விட்டேன். அம்மாவும் போய்ச் சேர்ந்தபின், தனித்து நின்ற எனக்கு தம்பிமார் கல்யாணம் செய்து வைப்பினம் என நினைத்தேன். ஆனால் அவர்கள் என்னைப் பற்றிக் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. ஒரு தம்பி குஜராத்தி பெண்ணையும், மற்றவன் ஒரு அவுஸ்திரேலிய வெள்ளை பொம்பிளையும் கல்யாணம் கட்டி உல்லாசமாக இருக்கினம். நான் தனிய சீவிக்கிறேன். தம்பிமார் என்னட்ட வந்து போறதுகூட இல்லை. ஆனால் பணக்கஷ்டம் வந்தால் மட்டும் ஓடிவருவினம். அக்கா! எனப் பாசமாக அழைத்ததும் மனம் இளகி காசைக் குடுத்திடுவேன். அவர்களுடைய ரிசேர்வ் பாங்க் நான் தான்.” என்று தன் மனதிலிருந்த ஆதங்கத்தைக் கொட்டினாள் ரேணு

”ஓம் நீயும் பாவம்தான். ஏன் ரேணு நீ வேலைக்குப் போறாய் வாறாய். உனக்குப் பிடித்தவர் அமைந்தால் கல்யாணம் கட்டுறது தானே.”

”நான் விரும்பி என்ன பிரயோசனம். என்னை ஒருவர் விரும்ப வேணுமே. என்னைப்பார்? போலியோ வந்து ஊன்று கோல் பிடித்துக்  கொண்டு காலை இழுத்து இழுத்து நடக்கும் என்னை ஆர் விரும்பி கட்டப்போறாங்கள். தாய் தகப்பன் இருந்திருந்தால், சீதனமும் இருந்தா புரோக்கரைக் கொண்டு பேசிக்கீசி எனக்குக் கல்யாணம் செய்து வைச்சிருப்பினம்.”

”ம்…ம்…ம். முரளியைப் போல ஒருவன் தான் வந்து வாய்ப்பான். எனக்கு சீதனமாகக் குடுத்த ரொக்கக் காசை விவாகரத்தின் போது திருப்பித்தரச் சொல்லி முரளியிட்ட கேள் எண்டு அம்மா சொல்லுறா. இதை லாயர்ட்டச் சொல்ல அவர் அது என்ன டவுரி. அப்படி தான் கேள்விப்படவில்லையாம். ஏதாவது எழுத்திலே இருக்கா என்று கேட்கிறார்.”

”அப்படியோ ?”

”அம்மா சொல்லுறா ஊரிலே யாழ்ப்பாணத்து தேசவழமையின்படி கலியாணம் ரிஜஸ்டர் பண்ணும் போது சீதனம் இவ்வளவு எனப் பத்திரத்திலே எழுதப்படுமாம். கலியாணமானவர்கள் பிரிந்தால் சீதனமாகக் குடுத்ததை கணவர் மனைவிக்குத் திருப்பி குடுத்திடவேணுமாம். இங்கே அந்த தேசவழமை செல்லாது என்று அம்மாவுக்குச் சொல்ல, அவ தன் தலையிலே அடித்து போச்சு! போச்சு! உண்ட அப்பா சேர்த்துவைத்த காசு துலைஞ்சுப் போச்சு என ஒப்பாரி வைக்கிறா.”

”உண்ட அம்மாவை நினைத்தா வருத்தமாயிருக்கு. நாங்களும் என்ன பாவம் செய்தோமோ? ஆறுதல் சொல்ல ஒருவருமில்லாமல் தவிக்கிறோம். ஆ மீனா நான் பேஸ்புக்கிலே இருக்கிறேன். நீ இருக்கிறீயா?

”இல்லை ஏன் ?

”நான் இருக்கிறேன். மேரி எண்ட புனை பெயரையும் உருவரைப்படிவத்தில் (profile) ஒரு குழந்தையின் படத்தையும் போட்டிருக்கிறேன். என் அடையாளத்தை மறைத்திருப்பதால் கூச்சப்படாமல் என் வேதனைகளை அதில் கொட்டித் தீர்ப்பேன். அதில் ஒரு ஆறுதல் கிடைக்கிறது. சில பேர் தங்கள் கவலைகளை சொல்லி எனக்கு ஆறுதலும் சொல்வார்கள். ஆனால், அனஸ்டேசியா என்ற ஒரு பெண் சொல்லும் அறிவுரைகள் எனக்கு பிரயோசனமாகவும் ஆறுதலாகவும் வாழ்க்கையில் ஒரு பிடிப்பையும் ஏற்படுத்துகிறது. நீயும் பேஸ்புக்கில் பதிந்துக்கொள்ளேன்.” என்றாள்.

”அனஸ்டேசியா ! அழகான பெயர். எந்த நாட்டை சேர்ந்தவள்?

”கூகுளில் போய் பார்த்தேன் அன்ஸ்டேசியா ருசியா நாட்டுப் பெயர்.   உருவரைப்படிவத்தில் (profile) ஒரு அழகான குழந்தையின் போட்டோ மட்டும் போட்டிருக்கிறா, சரி நான் வாறேன். முரளி எப்ப வருவார்?”

”வந்த நேரம் கண்டு கொள்ள வேண்டியது தான்” என சலிப்போடு சொன்னவள், வாசல்வரை சென்று சினேகிதியை வழியனுப்பி வைத்தாள் மீனா.

மீனாவும் பேஸ்புக்கில் ரீட்டா என்ற பெயரில் ஒரு பூங்கொத்தின் படத்தோடு பதிந்து கொண்டாள். குறிப்பின்றி தேர்ந்து மூன்று பெண்களுக்கும் கூடவே அனஸ்டேசியாவுக்கும் ஃப்ரெண்ட் அழைப்பு விடுத்தாள். தன் உண்மையான அடையாளத்தைப் போடாததால் எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் தனது நிலைமையையும், தான் அனுபவிக்கும் மனவேதனையையும் அதில் எழுதினாள். ரேணுவிடம் கூடச் சொல்லாமல் தேக்கி வைத்திருந்த கவலைகளை அதில் கொட்டித்தீர்த்தாள்.    அனஸ்டேசியாவும் உடனேயே அழைப்பை ஏற்றுக் கொண்டு மீனா பேஸ்புக்கில் எழுதியதை எல்லாம் வாசித்து விட்டு, ஒருநாள் மீனாவுக்கு பேஸ்புக் மெசெஞ்சரில்,

”ரிட்டா உமது கணவர் உம்மிடம் விவாகரத்து கேட்கிறார், வேறு ஒரு பெண்ணை விரும்புகிறார் என்னும் தாழ்வு மனப்பான்மையும் பாதுகாப்பற்ற மன நிலையோடு இருக்கிறீர்கள். இந்த வருத்தம் உமது மனதில் நிறைந்திருக்கிறது. அதில் இருந்து நீர் வெளியே வர வேண்டும். உமக்கும் எனக்கும் தலைக்கு மேல் ஒரு கூரை இருக்கிறது. எங்களுக்கு கை கால் இயங்கிக் கொண்டிருப்பதால் வேலைக்குப் போய் சம்பாதித்து எமக்கு வேண்டியதை பெற்றுகொள்ளக் கூடியதாகவிருக்கிறது. வயிறார சாப்பிடுகிறோம். வித விதமா உடை அணிகிறோம். இது ஏதுவுமே இல்லாமல் பட்டினி கிடக்கும் ஏழைகளையும் நோய், நொடியோடு கிடந்து அழுந்தும் மனிதரையும் நினைத்துப் பார்த்தால் உமது வாழ்க்கையின் அருமை புரியும். உமது வாழ்க்கையில் உள்ள பொசிடிவ் விசயங்களை ஆறுதலாக இருந்து யோசித்து பாரும்.” என எழுதியிருந்தார்.

மீனாவும் அனஸ்டேசியா சொன்னதைப் பல தடவை தன் மனதில் ஓடவிட்டாள்.

”அனஸ்டேசியா, தனது அடுத்த மெசெஜில், ”கை கால்கள் இழந்த மாற்றுத்திறனாளிகளை நீர் நேரில் பார்த்திருப்பீர் தானே. கண் பார்வை இழந்தவர்கள், ஊமைகள். இவ்வளவு குறைகளோடு அவர்களும் வாழ்கிறார்கள் தானே. இப்படிப்பட்டவரை உம்முடைய அன்றாட வாழ்க்கையில் பார்த்திருப்பீர் தானே. கடவுள் உமக்கு அப்படிப்பட்ட குறைகள் வைக்கவில்லையே. ஆகையால் உம்மிடம் இருக்கிறவற்றின் மதிப்பை உணர்ந்து மகிழ்வோடு இருக்கப்பாரும். என் வாழ்க்கை இப்படியா போயிட்டுதே என அழுது வாழ்வை வீணாக்காமல் இருக்கிறதை கொண்டு மனநிறைவோடு வாழப் பழகிக்கொள்ளும்,” என எழுதியிருந்தாள்.

ஒரு வாரத்திற்குப் பின் அனஸ்டேசியா பேஸ்புக் மெசெஜில், ”ரீட்டா உம்மை பிடிக்காத கணவர், வீட்டுக்கே வராத கணவரோடு வாழ்ந்து என்ன பிரயோசனம். உங்களுக்கிடையே எந்தவித உறவுமில்லையே, பாலியல் உறவுமிராது என நினைக்கிறேன். அவன் கேட்கிற விவாகரத்தை குடுத்திடு.  நீர் இந்த 21 ஆம் நூற்றாண்டு பெண். உம்மாலே தனியே சந்தோசமாக வாழமுடியும். சந்தோசம் என்பது மனதைப் பொறுத்தது. உமது தோற்றத்தை விரும்புகிறவனும் உமது மனதைப் புரிந்தவனையும் ஒருநாள் நீர் சந்திக்கலாம். உமது எதிர்கால வாழ்க்கையில் நம்பிக்கை வையும். உமக்கு ஒரு பிள்ளை வேணுமென்றால் ஒரு குழந்தையைத் தத்தெடுத்துக் கொள்ளூம். உமது தனிமைக்கு மருந்தாக இருக்கும். ஒரு பிள்ளைக்கு வாழ்வு கொடுத்த மகிழ்ச்சியும் மன நிறைவும் கிடைக்கும்.” என எழுதியிருந்தாள்.

அனஸ்டேசியாவின் வார்த்தைகள் மீனாவுக்கு புத்துணர்ச்சியூட்டியது மீனா இப்போது புது தெம்போடு வேலைக்குப் போய் வந்தாள். முரளியின் விருப்பப்படி விவாகரத்துக்குச் சம்மதித்து ஆறு மாதத்தில் விவாகரத்தும் கிடைத்தது. ஒரு குழந்தையை, தான் பிறந்த மண்ணான யாழ்ப்பாணத்திலிருந்து தத்தெடுப்பதற்கு வேண்டியதைச் செய்வதில் ஆசையோடு மும்முரமாக ஈடுபட்டாள்.

ரேணுவிற்கும் அனஸ்டேசியா பேஸ்புக் மூலம் பல மெசெஜ்கள் எழுதியிருந்தாள். அதில் கடைசியாக,”ரேணு உமது தனிமை உம்மை எவ்வளவு வாட்டுகிறது என எனக்கு விளங்குகிறது. நீர் உமது தாய் சகோதரர் என வாழ்ந்த போது, தனிமை உம்மை வாட்டவில்லை. இப்போது அவர்கள் உம்மோடு இல்லை என்றதும் நீர் தவிக்கிறீர். நீர் உமது ஓய்வு நேரங்களில் அநாதைப் பிள்ளைகள் பராமரிக்கிற ஒரு அமைப்பிற்குப் போய் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உதவி செய்யலாமே. அல்லது அப்படியான அமைப்பில் முழு நேர வேலையைத் தேடிக்கொள்ளும். உமக்குச் சம்பளமும் கிடைக்கும், அந்தப் பிள்ளைகளோடு சந்தோசமாகப் பொழுதும் போகும். அநாதை பிள்ளைகளுக்கு அன்பு காட்டுவதும், அவர்கள் முகத்தில் பிரகாசிக்கும் மகிழ்ச்சியும் அவர்கள் எங்கள் மேல் காட்டும் அன்புமே ஒரு தனி சுகம்,” என நம்பிக்கை ஊட்டும் முகமாக எழுதியிருந்தாள்.

ரேணுவும் அநாதை பிள்ளைகள் பராமரிக்கும் ஒரு அமைப்பில் மேட்ரன் வேலை தேடிக் கொண்டாள். இரவும் பகலும் குழந்தைகளோடு சந்தோசமாகப் பொழுதுகள் கழிந்தன.  தனிமை என்ற சொல்லையே ரேணு மறந்து போனாள்.

மீனாவும் ரேணுவும் அடிக்கடி சந்தித்துக் கொண்டனர். பேஸ்புக்  சினேகிதி அன்ஸ்டேசியாவோடும் பேஸ்புக் மெசேஜிங்கில் அவர்கள் தொடர்பு தொடர்ந்தது. இருவரும் தங்கள் வாழ்க்கையிலும் உள்ளத்திலும்   புத்துணர்வு கொடுத்த சினேகிதியை சந்திக்க விரும்பினர்.

“நீங்கள் இந்த உலகில் எங்கே வசிக்கிறீர்கள் ? எங்களால் முடியுமானால் அங்கு வந்து உங்களைச் சந்திக்க விருப்பப் படுகிறோம்,” என மெசேஜ் பண்ணினார்கள். அடுத்த நாளே, தான் அவுஸ்திரேலியாவில் நியுவ் சவுத்வேல்ஸ் மாநிலத்திலுள்ள கட்டும்பா என்னும் இடத்தில் வாழ்வதாகவும், தனது விலாசத்தையும் அலைபேசி இலக்கத்தையும் கொடுத்து பதில் எழுதியிருந்தாள் அனஸ்டேசியா. இருவரும், கட்டும்பா தாங்கள் வசிக்கும் சிட்னியில்லிருந்து நூறு கிலோ மீட்டர் தொலைவில் இருப்பதை இட்டு சந்தோசப்பட்டனர். அலைபேசியில் அனஸ்டேசியாவோடு தொடர்பு கொண்டு அடுத்து வருகிற சனிக்கிழமை மதியம் இரண்டு மணிக்கு அவளைச் சந்திக்க ஒழுங்கு செய்தனர்

சனிக்கிழமை காலை பத்து மணிக்கு மீனா தன் காரில் ரேணுவையும் ஏற்றிக் கொண்டு கட்டும்பா நோக்கிச் செலுத்தினாள். காரின் பின் ஆசனத்தில் சிவப்பு ரோசாப்பூ கொத்தும் மீனா செய்த சொக்கலட் கேக்கும் இருந்தது.

சரியா இரண்டு மணிக்கு அனஸ்டேசியா வீட்டு வாசற்கதவு மணியை அடித்தனர்.  ஒரு வயது போன வெள்ளைக்காரப் பெண்மணி இனியமுகத்தோடு அவர்களை வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றார். அனஸ்டேசியாவின் தாயாராக இருக்க வேண்டும் என அனுமானித்தார்கள். பேஸ்புக்கில் மெசென்ஞராலே அவர்கள் வாழ்க்கைக்கு புது அர்த்தத்தையும் மன நிம்மதியையும் கொடுத்த அந்த அற்புதமான அருமையான பெண்மணியைப் பார்க்கப் போகிறோம் என்னும் ஆவலோடு உள்ளே சென்றனர். அந்த விசாலமான அறையின் ஒரு பக்கத்தில் இருந்த மேசை மேல் ஒரு கணணி. அதற்கு முன்னால், தெளிந்த மினுமினுக்கும் சிவந்த நிற தோலுடன், பிறை நெற்றியும் கருநீல கண்களும், கூர் நாசியும், தாராள சிவந்த இதழ்களும், அலையலையாக தோள்வரை தவழ்ந்த மென்சிவப்பு நிற முடியுடனும் ஒரு அழகிய தேவதை அமர்ந்திருந்தாள். அவள் வாயில் பிடித்திருந்த குச்சியினால் கணணியில் டைப் அடித்துக் கொண்டிருந்தாள். அவர்களைக் கண்டதும் குச்சியை ஒரு பக்கமா போட்டுவிட்டு, புன்னகைத்தபடி,

”வாருங்கள் வாருங்கள். வந்து இருங்கள். நீங்கள் என்னைப் பார்க்க வந்ததில் மிக்க மகிழ்ச்சி,” என ஆங்கிலத்தில் கூறினாள். சோபாவில் அமர்ந்த மீனாவும் ரேணுவும் அவள் எழுந்து வருவாள் என எதிர்பார்த்தனர், ஆனால் அவள் எழவேயில்லை. அவள் தன் வாயினால் இயக்கப்பிடியை (joystick) இயக்க அவள் அமர்ந்திருந்த சக்கரவண்டி அவர்களை நோக்கி நகர்ந்தது. அருகே வந்தவள், ”மேரி! ரீட்டா! ஆம் ஐ ரைட். நான் அனஸ்டேசியா. தாமதித்தற்கு சொறி,” என நேர்த்தியான வெள்ளை முத்து வரிசை பற்கள் தெரிய பரந்த புன்சிரிப்போடு கூறினாள்.

“இவ பிரபலமான ’மை லைஃப்’ என்ற ஆங்கில டெலிடிராமவிலே ஆட்டமும் பாட்டுமாக நடித்த கவர்ச்சி நடிகை கரோலின் அல்லவா?” என மெதுவாக ரேணு மீனாவுக்கு சொன்னாள்.

”ஓம், ஒரு கார் விபத்……தில்… ! இந்த ஐந்து வருசமா அந்த டிராமாவில் அவ நடிப்பதில்லையே? பதிலளித்தாள் மீனா.

பிரமிப்பில், பேச்சிழந்திருந்த மீனாவையும் ரேணுவையும் பார்த்து

 ”இந்த ரோசாப்பூக்கள் எனக்கா?” என அனஸ்டேசியா கேட்க, மீனா எழுந்து பூக்களை அவள் மடியில் வைத்தாள். ரேணுவோ இன்னும் திகைப்பில் இருந்து விடுபடாமல் அமர்ந்திருந்தாள்.

****பெரிய சிவப்பி****

15 நவம்பர் 2020 தினக்குரல் பத்திரிகையில் பிரசுரமான என் சிறுகதை

முப்பது அடி தூரத்திலிருந்தபடி வைத்த கண் வாங்காமல் என்னைப் பார்த்தபடி நின்றாள் அந்த சிவப்பி. அவள் என்னிலும் உயரமாக இருந்தாள். இப்படி ஒரு அழகியை என் வாழ்நாளிலே நான் கண்டதில்லை. நான் அவளை நோக்க அவள் என்னை நோக்க, அப்படியே சில நிமிடம் நின்றோம். பின்பு அவள் என்னை நோக்கி நகர்ந்தாள்.

                அவளின் பின்னங்கால்களும் வாலும் சேர்ந்து முக்காலியாக அமையத் தன்னை சமநிலைப் படுத்தியபடி முன் கால்களை உயர்த்தி நின்றாள். அவுஸ்திரேலியாவிற்கே உரி ய மாபெரும் சிவப்பு கங்காரு விலங்குத்திரளின் தலைவியான (marsupial) பைம்மாவினம் என்னை தாக்கத் தயாராகிக் கொண்டிருப்பதை உணர்ந்தேன். என்னை நோக்கி சிறு துள்ளலோடு முன்னேறினாள்.

இப்படிப் பாய்ந்து பாய்ந்து தாக்கக் கூடிய அளவெல்லை வந்ததும், தன் வைரம் வாய்ந்த வால் மேல் ஊன்றிப் பாய்ந்து அவள் முன் கால்களால் என்னைப் பற்றிக் கொண்டு பின் கால்களின் நகங்களால் என் வயிற்றைக் கிழித்து குடலை உருவி எடுக்கத் தயாராகிறது, என எனக்குப் புரிந்துவிட்டது. பயத்தில் என் உடல் நடுங்கியது, மனதில் ஒரே பீதி, ஆனால் இனி பின் வாங்கமுடியாத நிலை.

சிறீலங்காவின் உள்நாட்டுப் போரில் உயிர்பிழைத்து இந்த கங்காரு தேசத்திற்கு 1995 ஆண்டில் குடிபெயர்ந்து இப்போது ஒரு கங்காருவால் சாகப் போகிறேனா? இங்கு புலம் பெயர்ந்த போது இந்த ஊரில் வேலை செய்த அனுபவம் இருந்தால் தான் வேலை கிடைக்கும் என்ற நிலைமை. எனது நீள் துப்பாக்கி சுடும் அனுபவத்தையும்  துப்பாக்கிச் சூடு போட்டிகளில் கிடைத்த பரிசு பத்திரங்களையும் காட்டி கங்காருக்களை அறுவடை செய்யும் வர்த்தகத்துறையில் முழு உரிமைபெற்ற தொழில் வல்லுநர் ஆனேன். கங்காருக்களைக் கொன்று அதன் இறைச்சியையும், தோலையும் விற்று பணம் சம்பாதித்தேன். அதோடு காட்டில் வசிக்கும் கங்காருக்கள் பெருகி, கால் நடை மேய்ச்சல் நிலப் புல்வெளிகளை மேய்ந்து அழித்து விடுவதால் பண்ணைக்காரர்கள் என்னை போன்றவர்களுக்குக் கூலி கொடுத்து கங்காருக்களைச் சுடுவதற்கு நியமிப்பார்கள். அந்த வேலையாகத்தான் பேர்க் என்ற ஊரிலிருக்கும், கமரூன் கால்நடைப் பண்ணையில் இப்போது நிற்கிறேன்.

என்னிடம் கைவசம் 12 தோட்டா மகசீன் கொண்ட ஒரு பி எஸ் ஏ 22 நீள் துப்பாக்கி இருந்தது. இது பழைய பிரித்தானியக் காலத்துத் துப்பாக்கி. ஒரு கைபார்க்கிறதென்று நான் துணிந்துவிட்டேன். தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் என் உயிருக்குத்தான் ஆபத்து. சிவப்பியின் தலையை அல்லது நெஞ்சைத் தான் குறி வைக்க வேண்டும். சிவப்பியின் சிறிய தலை  ஒவ்வொரு பாய்ச்சலுக்கும் ஓயாது ஆடிக்கொண்டிருந்தது. அவள் பரந்த நெஞ்சு மேலேயும் கீழேயும் போய்க் கொண்டிருந்தது. சிவப்பி என்னைக் கிட்டியதும், அவள் நெஞ்சைக் குறிபார்த்துச் சுட்டேன், டுமில்!! ஒரு நிரலொளுங்கு தொடங்கியது. பாய்ச்சல், சமநிலை டுமில். பாய்ச்சல், சமநிலை, டுமில். ஆயினும் சிவப்பி உறுதியான நோக்கத்துடன் என்னை நோக்கி முன்னேற அவள் உருவம் பெரிதாகி பெரிதாகி என்னை அச்சுறுத்தியது. என் துப்பாக்கியில் எஞ்சியிருப்பது எத்தனை தோட்டா? ஒன்றா? இரண்டா? இதோ கிட்டவே வந்துவிட்டாள், சடாரென்று சிவப்பி முகம் குப்புற நிலத்தில் விழுந்தாள். எனக்கு ஒரு அடி தூரத்தில் அவள் தலையும் என்னைப் பற்றிப்பிடிக்கப் பார்த்த கைகளும் கிடந்தன. என் காலடியில் சிவப்பி இறந்துக்கிடந்தாள்.!

உடனேயே நான் சிவப்பியின் வயிற்றுப் பைக்குள் கையைவிட்டுக் குட்டிகள் இருக்கின்றனவா என துழாவிப் பார்த்தேன். வெறுமையாகவிருந்தது ’கடவுளே! நன்றி, என்றேன்’. தாயின் மடியைவிட்டு இறங்காத குட்டிகளைக் கொல்ல எனக்கு மனம் வருவதில்லை. ஆனால் அவுஸ்திரேலிய அரசாங்கம் வரைந்து வைத்திருக்கும் இரக்க கோட்பாடுகளின்படி, ஒரு பெண் கங்காருவைச் சுட்டுக் கொன்றால் அதன் வயிற்றுப் பையில் குட்டிகள் இருந்தால், ஜீவகாருண்ய நியதிப்படி குட்டி களையும் கொல்லவேண்டும். காரணம் தாயின் பை இல்லாமல் அவை உயிர்வாழ முடியாது.

                 சிவப்பியின் தோலை உரிப்பதற்கு என் வேட்டையாடும் கத்தி கைவசம் இருக்கவில்லை. ஆகையால் பண்ணைக்கே திரும்பினேன். இரவு உணவிற்குப் பின் ஒன்பது மணி போல, நல்ல நிலவு வெளிச்சத்தில் குறும்காட்டுப் புதரின் ஊடாகச் சென்று சிவப்பியின் தோலை உரித்தேன். ஆஹா!! என்ன அழகான மினுமினுக்கும் சிவப்பு. அதைக் கோணிப்பையில் போட்டு என் முதுகில் சுமந்து கொண்டு நட்சத்திரங்கள் வழிகாட்டப் பண்ணையை நோக்கி நடக்க தொடங்கவும், ஒரு முப்பது கங்காருக்கள் கும்பலாகத்திரண்டு நாற்பது அடி விட்டத்தில் அரை வட்டமாக என்னைப் பின்தொடர்ந்தன. நான் வியர்த்து வெலவெலத்துப் போனேன். இரண்டு மைல் தூரத்திலிருந்த கால்நடைப் பண்ணைக்குப் போய்ச் சேரும் வரை பின்தொடர்ந்தன. கடவுள் காத்தார் அவை என்னைத் தாக்கவில்லை. ஆகையால் இன்றும் என் தொழில் பயணத்தைத் தொடர்கிறேன்.

நன்றி தினக்குரல்